இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் சிறை தண்டனை விதிப்பு! – பின்னணி என்ன?

Published On:

| By christopher

ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) உத்தரவிட்டது.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் 22வது பிரதமர் ஆனார்.

ADVERTISEMENT

எனினும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவர் மீது ஊழல், அதிகாரப்பூர்வ ரகசியங்களை வெளிப்படுத்துதல் மற்றும் திருமணச் சட்டங்களை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ADVERTISEMENT

இவை தனித்தனி வழக்குகளாக விசாரிக்கப்பட்டு முறையே 10, 14 மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை கடந்த 2023ஆம் ஆண்டு ராவல்பிண்டியின் காரிஸன் நகர சிறையில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது. பாகிஸ்தான் சட்டத்தின் கீழ், அவர் ஏக நேரத்தில் இந்த தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என அறிவித்தது.

இந்த நிலையில் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்திற்கு ஈடாக, இம்ரான்கானுக்கு சொந்தமான ஆல்-கதிர் அறக்கட்டளை மூலம் நிலத்தை பரிசாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாகவும், அரசுக்கு 190 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி இம்ரான் கான் (வயது 72), அவரது மனைவியும், ஆல்-கதிர் அறங்கட்டளை அறங்காவலரான புஷ்ரா பீபி (வயது 50) மற்றும் ஆறு பேர் மீது தேசிய பாதுகாப்பு முகமை டிசம்பர் 2023ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

அடிலா சிறையில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்த நிலையில், அனைத்து வாதங்களும் நிறைவடைந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நிலையில், தற்போது அதற்கான தண்டனை விவரங்களை நீதிபதி நசீர் ஜாவேத் ராணா அறிவித்தார்.

இதன்படி, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர் போட்ட மாலையை அகற்றிய அதிமுகவினர்: என்ன நடந்தது?

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி திமுகவுக்கே… ரகசியம் சொல்லும் வி.சி. சந்திரகுமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share