கடவுள்கள் எல்லாம் சரியாகவே இருக்கின்றனர், சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை என்று திருப்பரங்குன்றம் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. important observation in Thiruparangundram Hill case
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு சமைத்து சாப்பிட கூடாது என்று இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
“திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று” என்று அறிவிக்க கோரி விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “திருப்பரங்குன்றம் மலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மலையாகும். இது சமணர் மலை. எனவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் மலை என்று அறிவிக்க வேண்டும். சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த மலையில் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை மீட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழிகளை பலியிடவும், மலையில் அசைவம் சாப்பிடவும் தடைவிதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த அனைத்து மனுக்களும் இன்று (மார்ச் 24) நீதிபதிகள் நிஷாபானு , ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள 18-ஆம் படி கருப்புசாமி கோயில், பாண்டி முனீஸ்வரர் கோயில், மலையாண்டி கருப்புசாமி கோயில் மற்றும் முனியப்பன் கோயில்களில் ஆடு கோழிகள் பலியிடுவது வழக்கம்.
மலையின் வடக்கு பகுதியில் முருகன் கோயிலும், தெற்கு பகுதியில் சமண அடையாளங்களும் இடைப்பட்ட பகுதியில் தர்காவும் உள்ளன.
இந்து மக்களால் ஸ்கந்தமலை என்றும் இஸ்லாமியர்களால் சிக்கந்தர் மலை என்றும் சமண சமயத்தவர்களால் சமண குன்று என்றும் உள்ளூர் மக்களால் திருப்பரங்குன்றம் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையைப் பேண அரசு விரும்புகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி அமைதி கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், ‘தர்காவுக்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் வழங்கப்படும். இந்த மலை பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினர் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் தங்களுடைய இந்த நடைமுறையில் வெளி நபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்” என்றும் கூறி ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது’” என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், ‘திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய தொல்லியல் துறை சார்பில், “திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது. இதனால் மலையில் எதை செய்தாலும் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்”என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை” என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும் தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மனுதாரர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான உத்தரவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். important observation in Thiruparangundram Hill case