2022-இல் இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 2022 டி20 உலகக்கோப்பையை எதிர்கொண்ட இந்திய அணி, அரையிறுதி வரை சென்று தொடரில் இருந்து வெளியேறியது.
இதைதொடர்ந்து, 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது.
11 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு ஐசிசி கோப்பையை எதிர்நோக்கி, 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்று, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிக நீண்டகால தாகத்தை தீர்த்தது.
இந்த கோப்பையை வென்ற பிறகு, விராட் கோலியுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.
தற்போது, ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா விரைவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோகித் சர்மாவிடம், அவரது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நான் அதை பற்றி எதையும் யோசிக்கவில்லை. அதனால், இன்னும் சில காலத்திற்கு நான் விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள்”, என பதில் அளித்திருந்தார்.
இது அவரின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, அடுத்து நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ரோபி மற்றும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் இந்திய அணியை ரோகித் சர்மா தான் வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா தகவல் தெரிவித்திருந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 159 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா, 5 சதம், 32 அரைசதங்கள் உட்பட 4231 ரன்களை குவித்துள்ளார்.
அதேபோல, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கில் ரோகித் சர்மா ஒரு ஜாம்பவானாகவே திகழ்கிறார்.
தற்போது வரை 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித், 3 இரட்டை சதங்கள், 31 சதங்கள் உட்பட 10,709 ரன்களை குவித்துள்ளார்.
59 டெஸ்ட் போட்டிகளில் 1 இரட்டை சதம், 12 சதங்களுடன் 4138 ரன்களை சேர்த்துள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிராகரிக்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இந்த மாதம் முதல் ரூ.1,000 !
ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க உதவும் இரவு நேர உணவு முறை!