பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

mkStalin is going to make an important announcement soon!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று (ஜனவரி 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். இது அரசு ஊழியர்கள் இடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 22ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ADVERTISEMENT

22 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்சனை குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என பேச்சு வார்த்தையின் போது அமைச்சர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சர் அறிவித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்போம் என்று தெரிவித்தனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share