ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான ’இம்பீச்மெண்ட்’ தீர்மான நோட்டீஸ்- மக்களவை சபாநாயகரிடம் இன்று கொடுக்கும் திமுக

Published On:

| By Mathi

G.R. Swaminathan DMK

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் திமுக எம்.பிக்கள் இன்று டிசம்பர் 9-ந் தேதி வழங்க உள்ளனர்.

சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி சமூகப் பதற்றத்தை உருவாக்குகிறார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் என்பது திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டு. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள நில அளவைக் கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அண்மையில் ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவால் மதுரையில் மதமோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது என்கின்றனர் இந்தியா கூட்டணி தலைவர்கள்.

ADVERTISEMENT

இத்தகைய சர்ச்சையான தீர்ப்புகளை வழங்கி வரும் ஜிஆர் சுவாமிநாதனை, நீதிபதி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் இம்பீச்மெண்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பிக்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

மக்களவையில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வர 100 எம்.பிக்கள் கையெழுத்து தேவை; மாநிலங்களவையில் 50 எம்.பிக்கள் கையெழுத்து தேவை. கடந்த சில நாட்களாக திமுக எம்.பிக்கள், ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸுக்காக பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 9) மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம், ஜிஆர் சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து தகுதி நீக்க வகை செய்யும் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை திமுக எம்.பிக்கள் வழங்க உள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share