’டிராகன்’ படத்தில் நடித்த பிறகு, சமூகவலைதளங்கள் எங்கும் கயாது லோஹரின் புகழ் என்றாகிவிட்டது. Immortal The title tells the story
‘அடிச்சாண்டா அப்பாயின்மெண்ட் ஆர்டரு’ என்று வடிவேலு சொல்லும் வசனம் போல, அவரது நான்கைந்து ஆண்டு காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. அதற்கேற்றாற் போலத் தொடர்ந்து அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
2021, 2022இல் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் அறிமுகமானபோதும், தமிழுக்கு அவரைக் கொண்டு வந்தது ‘டிராகன்’ தான். அதற்கு முன்பே ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் எஸ்டிஆர் ஜோடியாக அவர் நடிக்க இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த பாத்திரத்தில் சித்தி இத்னானி நடித்தார்.
அந்த இழப்பை ஈடுகட்டும்விதமாக, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் எஸ்டிஆர் 49 படத்தில் கயாது லோஹர் நடிக்கிறார்.
’டிராகன்’ படத்திற்கு முன்பே, அதர்வா ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் அவர் கமிட் ஆகிவிட்டார். அந்த படமும் தற்போது நிறைவடையும் தருவாயை எட்டியிருக்கிறது.

இந்தச் சூழலில், ஜி.வி.பிரகாஷ் குமார் உடன் கயாது லோஹர் நடிக்கிற ‘இம்மார்ட்டல்’ படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது டிராகனுக்கு முன்னர் கயாது நடித்த படமா எனத் தெரியவில்லை. ஏனென்றால், சமீபகாலமாக ‘கிங்ஸன்’ தவிர்த்து வேறெந்த புதிய படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்ததாகத் தகவல் இல்லை.
எது எப்படியானாலும், இப்படம் முழுக்க முழுக்க நாயகன் நாயகியை மட்டுமே மையப்படுத்தியதாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது ‘இம்மார்ட்டல்’ பர்ஸ்ட் லுக்.
ஒரு குளியல் தொட்டியில் நாயகனும் நாயகியும் நுரை ததும்பும் நீரில் திளைத்தவாறு கையில் ‘கலர்’ திரவமொன்றை (?!) ஏந்தியவாறு போஸ் கொடுப்பதாக அந்த ‘லுக்’ அமைந்திருக்கிறது. அதன் பின்னணியில் மேகம் போன்று ஒரு ‘டிராகன்’ உருவம் நாக்கை நீட்டியவாறு இருக்கும் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு போஸ்டரில் ‘புதிர் பார்வை’யுடன் கயாது லோஹர் ஜி.வி.பியை பார்ப்பதாக அமைந்திருக்கிறது. அதிலும், கற்றைக் குழலென நாயகியின் கூந்தல் புரண்டோடுகிற பின்னணி காட்டப்பட்டிருக்கிறது.
சாம் சி.எஸ். இசையமைக்கிற இப்படத்தை எழுதி இயக்குகிறார் மாரியப்பன் சின்னா. தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கும் இயக்குனர், ‘டைட்டிலே அனைத்தையும் சொல்லிவிடும்’ என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மைதான் என்பது போல, மேற்சொன்ன விவரங்களே, இது ஒரு ‘ஹாரர் த்ரில்லர்’ படம் என்பதைச் சொல்லிவிடும்.
‘பிள்ளை நிலா’, ‘மை டியர் லிசா’ பாணியில் நாயகியை மையப்படுத்திய ‘ஹாரர்’ கதைகளைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது. அந்த வகையில், ஜி.வி.பிரகாஷ்குமாரின் ‘இம்மார்ட்டல்’ அந்த குறையைத் தீர்த்து வைக்குமென்று நம்பலாம். கூடவே, கயாது லோஹர் ரசிகர்கள் கொண்டாடுகிற வண்ணம் அவருக்கான முக்கியத்துவம் திரையில் இருக்குமென்றும் நம்பலாம்.. பர்ஸ்ட் லுக் அதனை உறுதிப்படுத்துகிறது..! Immortal The title tells the story