ரஜினியின் கூலி டீசரில் வந்த இசை… நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

Published On:

| By christopher

ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அனிருத் இசையமைத்திருந்த இந்த டீசரில் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் ’வா வா பக்கம் வா’ பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கூலி படத்தில் அனுமதியின்றி, தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், டீசரில் இடம்பெற்றுள்ள வா வா பக்கம் வா பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றும், முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை. அதே போன்று, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ என்ற படத்தில் இடம்பெற்ற “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரஜினியின் கூலி டீசரில் வந்த இசை… நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

வேலைவாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share