ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இசைத்துறையில் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளர் இளையராஜா பணியாற்றி வருகிறார். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவரது இசையில் உருவாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பெங்களூரூவைச் சேர்ந்த மெர்க்குரி பவுண்டேசன் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று (டிசம்பர் 15) இரவு நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக இளையராஜா நேற்று மாலை 6.30 மணியளவில் சென்றிருந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் தெலுங்கானவை சேர்ந்த ஸ்ரீ நாராயண ஜீயர் ஆகியோருக்கு மேள தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆண்டாள் ரெங்கமன்னரை தரிசனம் செய்ய சென்ற ஜீயர்களுடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது ஜீயர்களும் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறி தடுத்து நிறுத்தினர்.
அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் இளையராஜாவிற்கு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இளையராஜாவும் அங்கிருந்தபடியே நின்று சாமி தரிசனம் செய்தார்.
அர்த்தமண்டபத்திற்குள் இளையராஜாவை நுழைய விடாமல் ஜீயர்கள் தடுத்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்?
இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அவர்கள், ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்றே பாவித்து வருவதாகவும், அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், சம்பவத்தன்று ஜீயர்களுடன் சேர்ந்து இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா வெளியே சென்றதாகவும் கோயில் நிர்வாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாஹீர் ஹுசைன் காலமானார்… உறுதி செய்த குடும்பத்தினர்!
”ஆதவ் அர்ஜுனா விலக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” : திருமா
டாப் 10 நியூஸ் : உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் மோடி – இலங்கை அதிபர் சந்திப்பு வரை!
Comments are closed.