ஆண்டாள் கோவிலில் நடந்தது என்ன? இளையராஜா விளக்கம்!

Published On:

| By Selvam

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் வதந்தி என்று இசையமைப்பாளர் இளையராஜா இன்று (டிசம்பர் 16) விளக்கமளித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று (டிசம்பர் 15) இரவு நடைபெற்றது.

அப்போது கோயிலில் உள்ள அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் வெளியே நிற்குமாறு கூறி, மண்டப நுழைவாயிலில் வைத்து மரியாதை செய்தனர்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இளையராஜாவை அர்த்த மண்டபத்தில் நுழைய அனுமதிக்காதது குறித்து பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இயக்குனர் அமீர், “சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போதும் மலரும்?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

நடிகை கஸ்தூரி, “இளையராஜாவே ஒரு கடவுள் தான். அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை” என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கமளித்த இந்து சமய அறநிலையத்துறை, “ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.

இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் நேற்று கோவிலுக்கு வருகை புரிந்ததார். அப்போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் வலைதள பதிவில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை.

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

பாடகர் வேல்முருகன் கைதாகி விடுவிப்பு – என்ன நடந்தது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share