”ஐயோ சார்… அத மறந்துட்டீங்களா?” : பதறிய மணிரத்னம்… கூலாக சூப்பர்ஹிட் சாங் கொடுத்த இளையராஜா

Published On:

| By christopher

ilayaraaja shares thalapathi song making with mani

பண்ணைபுரம் என்ற கிராமத்தில் இருந்து சாதிக்கும் வேட்கையுடன் ஒரு சாதாரண இளைஞனாக சென்னை வந்தவர் இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைத்து, தற்போது ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து இசையுலகின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளார். அதன் தொடர்ச்சியாக லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ilayaraaja shares thalapathi song making with mani

இந்த நிலையில் சமீபத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுடன் நடந்த உரையாடலில், தனது இசை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் தளபதி படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உருவாக்கம் குறித்தும், இயக்குநர் மணிரத்னத்தின் அறிமுகம் குறித்தும் விவரித்துள்ளார் இளையராஜா.

தேவாரம் வரிகள் இடம்பெற்றது இப்படிதான்! ilayaraaja shares thalapathi song making with mani

அவர் கூறுகையில், ”ராக்கம்மா கையத்தட்டு பாடலில் தேவாரம் பாடல் வரிகள் இடம்பெற்றதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.

தளபதி படப் பாடல்களை மும்பையில் தான் ரெக்கார்ட் செய்தோம். ராக்கம்மா கையத்தட்டு ஃபுல் பாடலும் தயாராகிவிட்டது. “ரெடி, டேக், போகலாம்” என்கிறேன்.

அப்போது மணிரத்தினம் வந்தார். “ராஜா, இதுல தான் நான் ஹீரோயினை அறிமுகம் செய்யப் போகிறேன். அவர் இந்த கலாட்டாவெல்லாம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், கையில் விளக்கோடு வந்து, தெப்பக்குளத்தில் இருப்பார். அவருக்காக ஒரு சின்ன பாடல் வரவேண்டும் என்று உங்களிடம் சொல்லி இருந்தேனே! மறந்துட்டீங்களா?” என்றார்.

நானும் மறந்ததை ஒப்புக்கொண்டு, அங்கு இருந்த உதவியாளர்களில், “யாருக்காவது தேவாரம் தெரியுமா?” என்றேன். அங்கு ஒருவர், “ஆம்” என்று சொல்லி, “குனித்த புருவமும், கொவ்வை செவ்வாயில், குமிண் சிரிப்பும்” என்ற வரிகளை எழுதி தந்தார்.

பின்னர் கோரசை அழைத்து, மெட்டுக்கு ஏற்றவாறு பாட சொன்னேன். அப்படி உடனடியாக அந்த இடத்தில் உருவானது தான் இந்த பாடல். இதை அங்கிருந்த மும்பை ஆர்கெஸ்ட்ரா குழுவினரே வியந்து பார்த்தனர்” என்றார்.

மணிரத்னத்தை நான் தான் அடையாளம் காட்டினேன்! ilayaraaja shares thalapathi song making with mani

தொடர்ந்து அவர் மணிரத்னம் குறித்து கூறுகையில், “எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே ‘புதுசா யார் வந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்’ என்ற நோக்கம் எனக்கு முதன்மையாக இருந்தது. அதனால் தான் தெரியாதவங்க வரும்போது அவர்களுக்கு பாடல்களை கொடுத்துள்ளேன்.

மணிரத்னம் வந்தபோது அவர் எனக்கு அறிமுகம் கிடையாது. பாலு மகேந்திரா தான் ‘ஒரு பையனை அனுப்புகிறேன்; பாருங்கள்’ என்று மணிரத்னத்தை அனுப்பினார். இப்போது உள்ள மணிரத்னம் அப்போது இல்லை. பாரதிராஜா என்னுடைய நண்பராக இருக்கலாம். ஆனால் முதல் படம் பண்ணும் போது அவர் எனக்கு அறிமுகம் ஆகவில்லை. என்னுடைய பெயர் அவர்களுக்கு உதவியது. அவர்கள் படம் பண்ணுவதற்கு உறுதுணையாக, உத்வேகமாக, உயர்த்தி விடும் சக்தியாக இருந்துள்ளது.

மணிரத்னம் என்று நான் தான் அடையாளம் காட்டினேன்; ஜனங்கள் அல்ல. நான் அடையாளம் கண்டவரைத்தான் பின்னாளில் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். அதாவது நான் ரசிச்சு போட்ட டியூனை நீங்கள் ரசிப்பதை போன்று, நான் ரசிக்கிற அத்தனையையும் நீங்கள் ரசிக்கிறீர்கள் என்பது நிதர்சனமான உண்மை” என இளையராஜா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share