வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை 2’. டிசம்பர் 20 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.
படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற விடுதலை 2 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வெற்றிமாறன் இளையராஜா குறித்து பேசுகையில், ‘இளையராஜா இசைனா அதை பத்தி நான் கவலையே பட மாட்டேன். அப்படியே ஒதுங்கிடுவேன். அவர் ரொம்ப ஷார்ப்பா ஒர்க் செய்து விடுவார். 9 மணிக்கு என்னை வர சொன்னார்.நான் 9.10க்கு போனேன். அந்த 10 நிமிடத்தில் 4 பாடல்களை கையில் கொடுத்துட்டாரு. அதனால், நாம எதையும் பற்றி கவலைப்படாமல் படத்தின் இதரப்பணிகள் குறித்து ஆர்வம் காட்டலாம்’ என்றார்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “எந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் நான் இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தது இல்லை. ஆனால், இந்த படத்துக்கு இங்கே உட்கார்ந்துட்டு இருக்கேன்” என்றார்.
தொடர்ந்து சூரி பெயரை சொன்ன இளையராஜா… என்ன கைதட்டல காணும் என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் சூரியை பார்த்து, ‘நீ கூட்டிட்டு வந்த ஆளுங்க கை தட்டல பாத்தியா… சரியா வேலை செய்யல பாத்தியா ’ என இளையராஜா கேட்க, “எல்லோருமே என் அன்பு தம்பிகள், அண்ணன்கள் தான்” என்று சூரி பதிலளித்தார்.
அப்போது, “பிறகு ஏன் உன் பேரை சொன்னதும் கை தட்டல… விசில் அடிக்கல” என்று இளையராஜா கேட்க… “நீங்கள் பேசும்போது குறுக்கிடக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தாங்கள்” என்றார் சூரி.
இதையடுத்து இளையராஜா, “சூரி, உங்களை கதாநாயகனாக மாற்றியது வெற்றிமாறன் தான் .தற்போது எத்தனை திரைப்படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என கேட்டு, நீங்கள் காமெடி கதாபாத்திரத்தில் தானே நடித்து வந்தீர்கள், இப்போது கதாநாயகனாக நடிப்பது காமெடியனா அல்லது கதாநாயகனா… என்று கேள்வி கேட்டார்.
பின்னர் சூரியின் கையை பிடித்து சும்மாதான் என்று இளையராஜா சொல்ல, இதுவும் ஒருபதிவுதான் சார்” என்று சூரி கூறினார்.
தொடர்ந்து பேசிய இளையராஜா “உங்களை போலவே நானும் படம் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். நான் தான் முதலில் படத்தை பார்ப்பேன், எனக்கு பிறகு தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள். படத்திற்கு நான் தான் முதல் ரசிகன், எனக்கு தானே படத்தை முதலில் காண்பிக்கிறீர்கள்.
நான் ஒரு திரைப்படத்திற்கு எப்படி பாடல்கள் இசையமைப்பேன் என்றால் இயக்குநர்கள் சூழ்நிலையை சொல்லும் போது மனதில் ஒன்றும் இருக்காது வெறுமையாக இருக்கும். ஆனால் அதுவே ஆரம்பித்து விட்டது என்றால் வந்து கொண்டே இருக்கும்” என்றார்.
முன்னதாக, விடுதலை -1 இசை வெளியீட்டின் போது சூரி தனது சொந்த ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்தார். அவர்கள் மேடையில் சூரி பெயரை யார் சொன்னாலும் கத்துவதும், கோஷமிடுவதுமாக இருந்தனர்.
அப்போது டென்சன் ஆன இளையராஜா, இப்படியே கத்திக்கொண்டிருந்தால் மைக்கை கொடுத்துவிட்டு போய்விடுவேன் என்றார். அதன்பிறகு அவர்கள் கோஷமிடுவதை நிறுத்தினர்.
இந்த நிலையில் விடுதலை 2 இசை வெளியீட்டு விழாவில், சூரியை பார்த்து நீ கூட்டிட்டு வந்த ஆளுங்க கை தட்டல பாத்தியா என்று இளையராஜா கிண்டல் செய்யும் விதமாக கேட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நயன்தாராவுக்கு அடுத்த சிக்கல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கா? – அதானி குழுமம் விளக்கம்!