”ஜனனி ஜனனி பாடலைப் பாடியது நான் அல்ல…” : இளையராஜா சொன்ன ருசிகரத் தகவல்!

Published On:

| By christopher

ilaiyaraaja about janani janani song making

தமிழ் சினிமா தாண்டி இன்று இந்திய திரையுலகின் அசைக்கமுடியாத ஆளுமையாக உருவெடுத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ilaiyaraaja about janani janani song making

பண்ணைப்புரத்தில் தாயின் மடியில் தொடங்கிய அவரது இசைப்பயணம் இன்று பலரின் இரவுத் தூக்கத்திற்கும் தாலாட்டுப் பாடலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் நியூஸ் 18 செய்தித் தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுடன் நடந்த உரையாடலில் முதன்முதலாக தான் பாடிய பாடலின் பின்னணி, தான் விரும்பிய பாடிய பாடல்கள் குறித்து விரிவாக விவரித்துள்ளார் இளையராஜா.

வேறு யார் பாடினாலும் அந்த எஃபெக்ட் வராது! ilaiyaraaja about janani janani song making

பாடல்களை நீங்கள் பாட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்கிறீர்களா? அல்லது இயக்குனர்கள் விருப்பம் தெரிவிப்பார்களா? என கார்த்திகை செல்வன் கேட்டார்.

அதற்கு இளையராஜா, “16 வயதினிலே” படத்தில் தான் சினிமாவுக்காக முதல்முறையாக (சோளம் விதைக்கையிலே என்ற பாடல்) பாடினேன். அதை முடிவு செய்தது நான் தான். மற்றபடி படங்களில் பாடுவது என்பது இயல்பாக நடக்கும்.

ஒரு பாடலை யார் பாட வேண்டும் என்று நான் எழுதுகிறேனோ, அவர்களை பாடல் ரெக்கார்ட் செய்யும் அன்றைக்கு தான் அழைப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு டூயட் பாடல் என்று வைத்துக்கொள்வோம். அதனை எஸ்.பி.பியும் ஜானகியும் பாட வேண்டும் என எழுதி வைத்திருப்பேன். அதன் பிறகு எனது உதவியாளர்கள் அவர்களுக்கு தகவல் சொல்வார்கள். அவர்கள் வந்து பாடுவார்கள்.

ஒருமுறை ஒரு பாடலுக்காக எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவனை ஒருவர் பின் ஒருவராக உதவியாளர்கள் தொடர்பு கொண்டார்கள். அன்றைக்கு அனைவரும் வெளியூரில் இருந்ததால் அந்த பாடலை நானே பாடிவிட்டேன். இப்படித்தான் நான் பாடுவது ஆரம்பித்தது.

“நான் தேடும் செவ்வந்திப் பூ”, “தென்றல் வந்து தீண்டும் போது” என்ற பாடல் எல்லாம் நான் விரும்பி பாடியவை. இதெல்லாம் வேறு யார் பாடினாலும் அந்த எஃபெக்ட் வராது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ”தாய் மூகாம்பிகை படத்தில் அம்மனின் “ஜனனி ஜனனி” பாடலை நீங்கள் தான் பாடியிருந்தீங்க” என்று கேட்டதற்கு,

பாடியதைக் கேட்டு அனைவருமே அழுதுவிட்டனர்! ilaiyaraaja about janani janani song making

அது திடீரென்று தான் நடந்தது. அந்த பாடலை யேசுதாஸ் பாடுவதாக தான் இருந்தது. சங்கர் என்பவர் அதன் இயக்குனராக இருந்தார். நான் படத்தின் பின்னணி இசை அமைப்பதில் பிசியாக இருந்தேன். அப்போது சங்கர் என்னிடம் “நாளைக்கு பூஜை வைத்து இருக்கிறோம். நீங்க இன்னும் ட்யூனை கம்போஸ் பண்ணல சார்” என்றார்.

“சார் நைட் 10 மணிக்கு வீட்டுக்கு வாங்க” என்று பதிலளித்தேன். அப்போதெல்லாம் கம்போசிங் குரூப், நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லாரும் உடன் இருப்பார்கள். அவர்களுடன், உதவி இயக்குனர்கள் என கம்போசிங்கின்போது 10, 12 பேர் இருப்போம். அதற்குப் பிறகு வாலி சார், அவருடைய உதவியாளர்கள் வந்தனர்.

“ஜனனி ஜனனி” பாடலை கம்போஸ் செய்த போது நள்ளிரவு 12 மணி இருக்கும். டியூனுக்கு எல்லோரும் ஓகே சொல்லிவிட்டார்கள். ஏசுதாஸ் பாடுவதாக முடிவு செய்யப்பட்டு அவருக்கு தகவல் சொன்னோம். ஆனால் அவர் ஊரில் இல்லை. எப்போது அவர் வருகிறாரோ அப்போதுதான் ரெக்கார்ட் வைக்க முடியும் என்ற சூழல் இருந்தது.

அதற்கு சங்கர் “பூஜை உள்ளது. அதற்காக ரெக்கார்டை தள்ளிப் போக முடியாது. பாடலை ரிக்கார்ட் செய்து விடலாம்” என்றார் அவரிடம் “சார் நான் பாடலை பாடி விடுகிறேன். ஜேசுதாஸ் வந்ததும் அவரை பாட வைத்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளலாம்” என்று சொன்னேன்.

அப்படி ட்ராக் எடுக்கிற பழக்கமே இல்லையே சார் என்று டைரக்டர் சங்கர் சொன்னார். அவரிடம் நான் “பாடலை எடுத்து விடுவோம். டப்பிங் செய்வதை போன்று ஏசுதாஸ் பாடும் போது மாற்றிக் கொள்வோம்” என்றேன். “சரி சார். என்னதான் இருந்தாலும் ஜேசுதாஸ் பாடியது மாதிரி வருமா?சரி உங்க இஷ்டப்படி பண்ணுங்க” என்று சங்கர் சொன்னார்.

அவர் சீனியர் டைரக்டர் என்பதால் நான் அவரிடம் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. பின்னர் நான் பாட ஆரம்பித்தேன். பாட ஆரம்பித்தால் அங்கு வாசிப்பவர்கள் அழுகிறார்கள், கேட்கிறவர்கள் அழுகிறார்கள். சவுண்ட் இன்ஜினியர் வியந்து பார்த்தார். அவர் ஒரு நாளும் மியூசிக்கை ரசித்து கேட்கிற ஆள் கிடையாது.

அவர் எதற்குமே சீட்டை விட்டு எழுந்திருக்க மாட்டார். “ஜனனி” பாடலைக் கேட்டதும் அவர் எழுந்து வந்து “பாட்டு நல்லா இருக்கு சார்” என்றார். பாடலைக் கேட்டு கதாசிரியர் அழுதுவிட்டார்”

அதற்கு கார்த்திகை செல்வன், ’அது மூகாம்பிகை அம்மன் அருள் என்று நினைக்கிறேன் எனக் கூறியதற்கு, ”அட.. அவங்க தான் அந்த பாடலை பாடுனாங்க. மூகாம்பிகை அம்மன் அருள் என்ன!! பாடுனதே அவங்கதான்” என்று எளிமையாக கூறினார் இளையராஜா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share