மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கரக்பூர் ஐஐடியில் படித்து வந்த 21 வயது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் நேற்று (ஜூலை 18) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. IIT Kharagpur 4th year Student Suicide
கொல்கத்தாவை சேர்ந்த 21 வயது மாணவர் ரிதம் மொண்டல். இவர் மேற்குவங்க மாநிலம் ஐஐடி கரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து புதன்கிழமை மாணவர் விடுதிக்கு திரும்பி இருந்தார். அவருக்கு வகுப்புகள் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 10.40 மணியளவில் மாணவரின் தந்தை விடுதி அதிகாரிகளை அழைத்து தனது மகன் செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறினார். இதனால் விடுதி காப்பாளர் அவரது அறைக்குச் சென்று சோதனை செய்தார்.
மாணவர் பதிலளிக்காததால் ஐஐடி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து மாணவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மாணவரின் அறையில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் ஷான் மாலிக் அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 20-ம் தேதி ஓசோன் இன்ஜினியரிங் பிரிவில் படித்து வந்த அனிக்கெட் வால்கர் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மே 4-ம் தேதி பி டெக் மூன்றாம் ஆண்டு மாணவர் ஆசிப் கமர் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தற்போது மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான கவுன்சிலிங் பெற ஒவ்வொரு விடுதி அறையிலும் பார்கோடு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எந்த நேரம் ஆலோசனை தேவை என்றாலும் அதை பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
