“இப்போதெல்லாம் வேலையே கிடைப்பதில்லை, ஐடி துறை டல்லாக இருக்கிறது” என்று புலம்புபவர்களுக்கு மத்தியில், ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். ஐஐடி ஹைதராபாத் (IIT Hyderabad) மாணவர் ஒருவருக்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது. இது ஐஐடி ஹைதராபாத் வரலாற்றிலேயே அதிகபட்ச சம்பளமாகும்.
யார் இந்த சாதனையாளர்?
ஐஐடி ஹைதராபாத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் (CSE) இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ் (Edward Nathan Varghese). ஹைதராபாத்தில் பிறந்து, பெங்களூருவில் பள்ளிப் படிப்பை முடித்த எட்வர்ட், தனது கடின உழைப்பால் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
எப்படி கிடைத்தது இந்த வேலை?
நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஆப்டிவர்’ (Optiver) என்ற உலகளாவிய வர்த்தக நிறுவனம், எட்வர்டுக்கு இந்த ஆஃபரை வழங்கியுள்ளது.
இது நேரடி கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்ததல்ல. எட்வர்ட் இந்த நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் இன்டர்ன்ஷிப் (Internship) செய்தார்.
அங்கு அவரின் திறமையைப் பார்த்து வியந்த நிறுவனம், இன்டர்ன்ஷிப் முடிந்த கையோடு அவருக்கு Pre-Placement Offer (PPO) வழங்கியது.
“நான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிய ஒரே கம்பெனி இதுதான். முதல் முயற்சியிலேயே இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று எட்வர்ட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடினமான சூழலிலும் சாதனை:
தற்போதைய சூழலில் வேலைவாய்ப்புச் சந்தை (Job Market) மந்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பல பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இப்படியான ஒரு ‘டஃப்’ (Tough) ஆன காலகட்டத்தில், ஒரு மாணவருக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கிடைத்திருப்பது நம்பிக்கையை விதைத்துள்ளது.
இதற்கு முன் 2017-ல் ஒரு மாணவருக்கு ரூ.1 கோடி சம்பளம் கிடைத்ததே ஐஐடி ஹைதராபாத்தின் சாதனையாக இருந்தது. இப்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐஐடி ஹைதராபாத்தின் சராசரி சம்பளமே 75% உயர்ந்து, ரூ.36 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றியின் ரகசியம்:
வெறும் படிப்பு மட்டும் போதாது என்கிறார் எட்வர்ட். கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலிருந்தே ‘காம்பெடிட்டிவ் புரோகிராமிங்‘ (Competitive Programming) எனப்படும் போட்டித் தேர்வுகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தியுள்ளார். இந்தியாவின் டாப் 100 புரோகிராமர்களில் ஒருவராக வந்ததே இந்த வேலை கிடைக்க முக்கியக் காரணம்.
திறமை இருந்தால் வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் என்பதற்கு எட்வர்ட் ஒரு சிறந்த உதாரணம். ஜூலை மாதம் முதல் அவர் நெதர்லாந்தில் தனது பணியைத் தொடங்கவுள்ளார்.
