கொரோனா தொற்று தமிழகத்தில் முதல் கட்டம் கடந்து, இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும் சமூகப் பரவல் என்ற மூன்றாம் கட்டத்துக்கு செல்லவில்லை என்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று சொல்லியிருக்கிறார். கொரோனா இரண்டாம் கட்டத்தில் இருந்தாலும், தமிழக ஆளுங்கட்சியின் டாப் லெவலில் கொரோனா அரசியல் அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டதாகவே சொல்கிறார்கள் கோட்டைக் கொத்தளத்தினர்.
கொரோனா என்ற உலகையே அச்சுறுத்தும் நோய்த் தொற்றுப் பரவல் உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை சம்பந்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்ற கருத்துருவாக்கம் இணையத்தில் தொடங்கி, டீ க்கடைகள் வரை பேசப்பட்ட நிலையில், அவர் ஓரங்கட்டப்பட்டார். இதுவே கொரோனாவின் முதல் கட்ட அரசியலாக பார்க்கப்பட்டது. விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்ட பின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதாவது அரசால் அதிகாரபூர்வமாக ஒவ்வொரு நாளும் கொரோனா நிலவரம் பற்றி சென்னை தேனாம்பேட்டை டிஎம் எஸ் (மருத்துவத் துறை இயக்குனரகம்) அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் பொறுப்பு டாக்டர் பீலா ராஜேஷுக்கு கொடுக்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக அவர் ஆய்வுக் கூட்டங்களையும், அதிகாரபூர்வ செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி பீலா ராஜேஷ் ஆய்வுக் கூட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்புக்குத் தயாரான நிலையில்தான்… தலைமைச் செயலாளர் சண்முகமே தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்துக்கு வந்து அவரே செய்தியாளர்களை சந்தித்தார். அவருக்குப் பின்னால் பீலா ராஜேஷ் மாஸ்க் பொருத்திக் கொண்டு மௌனமாக நின்றார். இதுதான் கொரோனா அரசியலின் இரண்டாம் கட்டம் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது தொடர்பாக டி.எம்.எஸ். , கோட்டை வட்டாரங்களில் விசாரித்தோம்.
“விஜயபாஸ்கருக்கும் முன்னாள் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. ஆனாலும் ஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பேசிய தகவல்கள், அதற்கு சிவி சண்முகம் போன்ற அமைச்சர்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அப்போது அதே துறையில் சித்தா, ஆயுர்வேத ஆணையராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் துறைச் செயலாளராகக் கொண்டு வந்தார். துறை அமைச்சருக்கு வசதியான நபர் துறைச் செயலாளராக இருக்கட்டும் என்று முதல்வரும் அதில் தலையிடவில்லை.
இந்த நிலையில்தான் விஜயபாஸ்கரின் மீதான அதிருப்தியால் அவரை சற்று ஒதுக்கி வைத்து பீலா ராஜேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் முதல்வர். அப்போது பீலா ராஜேஷை அழைத்து, ‘நீங்க சுதந்திரமா செயல்படுங்க;’ என்று அறிவுரை கொடுத்தார். அதன் அர்த்தம் என்னவெனில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டாம் என்பதுதான். ஆனாலும் துறை அமைச்சர் என்ற வகையில் விஜயபாஸ்கரின் அறிவுரைகளைத் தொடர்ந்து அலுவலக ரீதியில் பெற்று வந்தார். இது முதல்வருக்கும் லேசான அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கும் விதத்திலும் சில விமர்சனங்கள் முதல்வருக்கு சென்றிருக்கின்றன. குறிப்பாக டெல்லி மாநாடு, பிறகு ஒன் சோர்ஸ் என்று அவர் பயன்படுத்திய வார்த்தைகள் என முதல்வருக்கு தகவல்கள் சென்றன. இந்த நிலையில்தான் நன்றாக பேசக் கூடிய தலைமைச் செயலாளர் சண்முகத்திடம், ‘முடிந்தால் நீங்களே பிரஸை மீட் பண்ணிடுங்களேன்’ என்று முதல்வர் கூற அதன்படியே நேற்று டி எம் எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சண்முகம்.
இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு பீலா ராஜேஷ் இடத்தில் மீண்டும் ராதாகிருஷ்ணனையே கொண்டு வந்து அவரையே துறைச் செயலாளராக ஆக்கலாமா என்ற ஆலோசனை நடக்கிறது. இதுபோன்ற அசாதாரணமான சூழல்களை சந்திப்பதில் ராதாகிருஷ்ணன் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை தற்போதைய வருவாய் பேரிடர் ஆணையர் பதவியில் இருந்து மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ஆக்கினாலும் ஆச்சரியம் இல்லை” என்கிறார்கள்.
அதேநேரம், “ஆரம்பத்தில் நன்றாக இருந்த அமைச்சருக்கும் செயலாளருக்குமான பணிச் சூழல் இப்போது நன்றாக இல்லை. ஏப்ரல் 7ஆம் தேதி, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தேசிய சுகாதார குழுமம் (NHM) பில்டிங்கில்தான் இரவு வரை இருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அதே வளாகத்தில் டிபிஹெச் பில்டிங்கில் மாலை 6.00 மணிக்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அமைச்சரை அவர் பார்க்கவே இல்லை. இதற்கிடையில் சுகாதாரத்துறை அமைச்சரின் படத்தைப் போட்டு… ‘தமிழக அரசே! முதல்வர் பழனிசாமியே!! பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா இது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய விஜயபாஸ்கர் தலைமையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பொறுப்பை மீண்டும் வழங்கிடு. ஒட்டுமொத்த சுகாதாரத்துறையினரையும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அஜென்டாவை களத்தில் அமல்படுத்தவைத்த, பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் உறவினரான சுகாதாரத்துறை செயலாளர் பீலாவை டிஸ்மிஸ் செய்! மதவாத அரசியலுக்குத் தலைசாய்க்காதே, மக்களைக் காத்திடு’என்ற துண்டுப் பிரசுங்கள் சமூக தளங்களில் பரவ விடப்பட்டுள்ளன.
இந்த பிரசுரங்களை புழக்கத்தில் விட்டது விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சூழலில் பீலாவை துறைச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றினால் விஜயபாஸ்கருக்கு பிரச்சினை இல்லை” என்கிறார்கள் டி எம் எஸ் சில் இன்னொரு தரப்பினர்.
தலைமைச் செயலாளருக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலர் நம்மிடம், “நேற்று டி.எம்.எஸ் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நேற்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் முதல்வர், இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அந்த மருத்துவர்கள் எல்லாம் டி எம் எஸ் அலுவலகத்துக்குச் சென்று விட்டனர். அவர்கள் அனைவரோடும் மீண்டும் விரிவாக உரையாட விரும்பினார் தலைமைச் செயலாளர். அதற்காக அவர்கள் அனைவரையும் கோட்டைக்கு மீண்டும் அலைக்கழிக்க வேண்டாம் என்று, தானே டி எம் எஸ் சென்றுவிட்டார். சண்முகம் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் இயல்புடையவர். அதனால்தான் தான் தலைமைச் செயலாளாராக இருந்தபோதும் மருத்துவர்களை மீண்டும் கோட்டைக்கு அழைக்காமல் தானே டி எம் எஸ் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் என அனைவரோடும் ஒரே சிட்டிங்கில் ஆலோசிக்கலாம் என்று முடிவு செய்தார். அதற்காகவே டி எம் எஸ் சென்றார். அதன் பின் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில், ‘நானே மீட் பண்ணிடறேன்’ என்று சொல்லி அவரே பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். இதுதான் நடந்தது” என்கிறார்கள்.
சுகாதாரத்துறை செயலாளர் பதவியை டாக்டர் பீலா ராஜேஷிடம் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்த அசாதாரண நேரத்தில் கொடுக்கலாமா என்றும், இந்த அசாதாரண நேரத்தில்தானே கொடுக்க வேண்டும் என்று இரு வேறு விவாதங்கள் அரசின் தலைமைக்குள் நடந்துகொண்டிருக்கின்றன.
**-ஆரா**