ஈரோடு சிவகிரி முதிய தம்பதிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பல்லடம் மூவர் கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளது என்று மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் இன்று (மே 19) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் குமார், “ஈரோடு மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சிமேடு பகுதியில் மேகரையான் தோட்டம் என்ற இடத்தில், வாய்க்கால் கால்வாயை ஒட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம் ஆகிய இரண்டு வயதான முதிய தம்பதிகளை மர்ம நபர்கள் கொலை செய்து 10.75 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். ig senthil kumar about erode palladam murder

இதனையடுத்து, கடந்த மே 1-ஆம் தேதி சிவகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, விசாரிப்பதற்காக 12 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. எங்களுக்கு கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகள், பழைய குற்றவாளிகளின் விவரங்களை ஆராய்ந்து நிறைய பேரிடம் விசாரணை மேற்கொண்டோம்.
விசாரணையில், அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினோம். முதலில் ஆச்சியப்பனிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலையை மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோருடன் இணைந்து செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்காக ஆச்சியப்பன் பயன்படுத்திய இருசக்கர வாகனம், மரக்கட்டை, கையுறை ஆகியவற்றை பறிமுதல் செய்தோம்.
இவர் தேங்காய் உரிப்பது, தேங்காய் தோப்புக்கு சென்று தேங்காய் வாங்குவது போன்ற தொழில் செய்து வந்துள்ளார். அப்படி இவர் மேகரையான் தோட்டத்திற்கு செல்லும் போது வயதான தம்பதிகள் தனியாக இருப்பதை பார்க்கிறார். எனவே, இங்கு குற்றம் செய்தால், யாருக்கும் தெரியாது என்று அவர் முதிய தம்பதிகளை கொலை செய்துள்ளார்.
மாதேஸ்வரனிடம் விசாரணை நடத்தும்போது, அவரும் இதை ஒப்புக்கொண்டார். இறந்து போன ராமசாமியின் செல்போனை மாதேஸ்வரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்தோம். .
இந்த கொலை நடப்பதற்கு 10 நாட்கள் முன்பாக சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷ், நோட்டமிட்டுள்ளார். இந்த மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளோம். அதேபோல சம்பவ இடத்தில் சில கால் பாத தடங்களை சேகரித்திருக்கிறோம். அதையும் இந்த சந்தேக நபர்களின் கால் பாத தடங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக, தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஆச்சியப்பன், அவருக்கு தெரிந்த சென்னிமலை பாளையத்தில் உள்ள ஞானசேகர் என்பவரிடம் கொடுத்து அதை உருக்கி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
அந்த நகையை ஞானசேகரன் உருக்கி கொடுத்துள்ளார். அவரையும் கைது செய்துள்ளோம். ஆச்சியப்பன் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்ட தங்கக்கட்டி 82 கிராமை பறிமுதல் செய்துள்ளோம்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி, அவருடைய மகன் செந்தில் குமார், மனைவி அலமேலு ஆகியோர் கொலையையும் தாங்கள் தான் செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.
இதுமட்டுமில்லாமல் வேறு சில குற்றச்சம்பவங்களையும் இவர்கள் செய்ததாக சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றியும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார். ig senthil kumar about erode palladam murder
