‘கிட்னி விற்பனை விவகாரத்தை விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று (ஆகஸ்ட் 25) உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்த சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி மிகவும் தீவிரமானது. பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களை தரகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பால் சுரண்டப்பட்டு சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில காவல் துறை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், “இது போன்ற வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ”பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தெரிந்தபிறகு வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது” எனத் தெரிவித்தனர்.
மேலும், ”இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில், நீலகிரி எஸ்பி நிஷா, திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், கோவை எஸ்பி கார்த்திகேயன், மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவார்கள். இக்குழு நடத்தும் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் நேரடியாக கண்காணிக்கப்படும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.










