கோவையில் என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் கட்சி இப்போது திமுகவில் இருக்கிறது. விஜய் கட்சியினர் என்னை எதிர்த்து போட்டியிட்டால் எங்கே இருப்பார்கள் என்பதை அடுத்த பேட்டியில் சொல்கிறேன் என சஸ்பென்ஸ் வைத்து பேசி சென்றார்.
கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்களை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (டிசம்பர் 3) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மகளிர் அரசு அறிவியல் கல்லூரிக்கு ரூ. 2.46 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட எம்எல்ஏ நிதியில் இருந்து பணம் ஒதுக்கி உள்ளோம். பெண்கள் கல்லூரி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதற்காக நிதியை ஒதுக்கி உள்ளோம் என்றார்.
மேலும் SIR பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். டிசம்பர் 11ஆம் தேதி வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அனைவரும் ஆன்லைனில் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளில் பாஜக முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அமித்ஷா வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்
மேலும் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்துக்களின் கனவு. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் திமுக இதை இரண்டாம் பட்சமாக பார்க்கிறது. திமுக அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலர்கள் போன்று வேஷம் இடுகின்றனர். மீண்டும் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கின்றது என குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து ஒரு மாத காலத்தில் வலுவான கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் அமித்ஷாவை சந்திப்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, யாரை யார் எப்போது பார்க்க வேண்டும் என்பதை டெல்லியில் இருப்பவர்கள் சரியாக செய்வார்கள்.
அதேசமயம் திமுக வாக்குகள் பிரியும். திமுகவினரே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து 2026 தேர்தலுக்குப் பின் பேசலாம் என்றார்.
மேலும் என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் கட்சி இப்போது எங்கு உள்ளது திமுகவில்.. அதேபோன்று என்னை எதிர்த்து விஜய் கட்சி போட்டியிட்டால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என அடுத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்கிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்து சென்றார்.
