அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும் போராட்டத்தில் குதித்தனர்.
கூட்டணி கட்சிகளிடையே இந்த பிரச்சினையால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 8) அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் பாஜக நிர்வாகிகளை அழைத்து வந்து அதிமுகவை வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ” கல் வீசினால் உடைவதற்கு அதிமுக ஒன்றும் கண்ணாடி கிடையாது. அதிமுக என்பது ஒரு பெரும் சமுத்திரம். அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார்.
நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமானதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான பக்குவம் எல்லா தலைவர்களுக்கும் இருக்க வேண்டும், அது அண்ணாமலைக்கும் வேண்டும்.
பாஜகவில் இருந்து நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. அவர்களே வருகின்றனர். அதிமுகவில் நிர்வாகிகள் இணைவதை கண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்க கூடாது.
எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரித்தவர்களை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் பாஜகவால் தாங்க முடியாது” என்று கூறினார்.
மேலும் அவர், “2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் கூறியுள்ளனர். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை” என்றார்.
மேலும் ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார் ஜெயக்குமார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்

Comments are closed.