ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 16) அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முனைப்பில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கூட்டாட்சி மற்றும் நடைமுறைக்கு எதிரான “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும். ஏனெனில் அது ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டு வந்து, நாட்டின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றுவிடும்.
மத்திய பாஜக அரசு, நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு எதிரான அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற முனைப்புக் காட்டி வருகிறது.
முன்மொழியப்பட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் அவ்வப்போது தேர்தல்கள் வடிவில் வைக்கப்பட்டுள்ள சட்டச் சோதனைகள், அராஜகம் மற்றும் சர்வாதிகாரத்தால் நீக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், மாநிலத் தேர்தல்கள் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும். பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழிக்கப்படும்.
இந்தியாவின் அரசியலை மாற்றியமைக்க அச்சுறுத்தும் முக்கியமான சட்டத்தை நிறைவேற்ற பாஜகவுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை.
எனினும்கூட, நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளை தீர்ப்பதில் இருக்கும் தங்களது தோல்வியிலிருந்து கவனத்தைத் திருப்ப இந்த முயற்சியை பாஜக மேற்கொள்கிறது.
இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் இந்த அருவருப்புக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்” என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அர்த்த மண்டபத்தில் நுழைந்த இளையராஜா… தடுத்த ஜீயர்கள் : நடந்தது என்ன?
ஜாஹீர் ஹுசைன் காலமானார்… உறுதி செய்த குடும்பத்தினர்!
”ஆதவ் அர்ஜுனா விலக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” : திருமா