வைஃபை ஆன் செய்ததும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அனைத்து மீனவர் சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர்கள் மாநில மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்கான அறிவிப்பை தான் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசு அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.
திடீரென மீனவர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்து அதனை ராமநாதபுரத்தில் நடத்துவதன் பின்னணி என்ன என்று திமுக வட்டாரத்தில் விசாரித்த போது தான் இந்த மீனவர்கள் மாநாட்டுக்கு பின்னணியில் அரசியல் தூண்டில் இருப்பது தெரிந்தது.

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி நிற்ககூடும் என்ற விவாதம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.
ராமநாதபுரம் என்பது தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டங்களில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்று. விவசாயம், தொழில் வளர்ச்சி என்ற இரண்டிலும் பெரிய முன்னேற்றம் இல்லாத மாவட்டத்தில் மீன்பிடி தொழில் சார்ந்த மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
மேலும் இந்த மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தேவேந்திரகுல வேளாளர்கள் சமுதாயத்தின் முக்கிய ஆளுமையான இமானுவேல் சேகரன் ஆகியோரின் அடையாள அரசியலும் நிறைந்தது.
2021 தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி டிவிட் செய்தார். 2022 தேவர் குருபூஜைக்கு மோடி நேரடியாக வருவார் என்ற தகவல்கள் உலா வந்தன. ஆனால் அவர் வரவில்லை. மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாயத்திற்கு பொதுப் பெயர் கொடுத்து, ‘நான் நரேந்திரன் நீங்கள் தேவேந்திரர்’ என்று மோடி பேசிய பேச்சு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பெருமளவு பேசப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என் ரவி தேவர் நினைவிடத்துக்கும் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரத்தில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், தேவர் சமுதாய பிரதிநிதிகள், தேவேந்திர குல சமுதாய பிரதிநிதிகள், யாதவர் சமுதாய பிரதிநிதிகள் என்று சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
அதே நேரம் தேவர், இமானுவேல் நினைவிடங்களுக்குச் சென்ற ஆளுநர் ரவி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இதுவும் அரசியல் களத்தில் அப்போது விவாதம் ஆகியது. இதுகுறித்து மின்னம்பலத்தில் அப்போதே டிஜிட்டல் திண்ணை: கலாமை புறக்கணித்த கவர்னர்… மோடிக்காக ரவி போடும் ராம்நாடு ஸ்கெட்ச்! என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

ஆளுநர் ராமநாதபுரம் சென்று வந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தனது ராமநாதபுரம் பயணம் பற்றி விரிவான ஒரு ரிப்போர்ட் அனுப்பினார்.
இதற்குப் பிறகு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடத்தும் தமிழ்நாடு தழுவிய நடை பயணத்தை ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குவதாக அறிவித்தார். இந்தப் பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு ராமநாதபுரத்தை மையமாக வைத்து பாரதிய ஜனதா கட்சியின் செயல் திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால்… ஒருவேளை பிரதமர் மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நிற்கப் போகிறாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்து நிற்கிறது.
வடக்கே வாரணாசி என்கிற காசி, தெற்கே ராமேஸ்வரம் என்ற இந்தியாவின் இரு முனைகளையும் இணைக்கும் தலைவராக மோடியை அடையாளப்படுத்த அவரை ராமநாதபுரத்தில் போட்டியிட செய்வதற்கான ஆலோசனை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ஆலோசனை பற்றிய நம்பத் தகுந்த தகவல்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கிடைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே… ராமநாதபுரத்தில் மீனவர்கள் மாநாட்டை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழியின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் ஜூலை 21ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அவர் பதிலளித்த சில நாட்களிலேயே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜகவின் மத ,சாதி ரீதியான அரசியலை முறியடிக்கும் வகையில் மீனவர்கள் பாதுகாப்பு மாநாடு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட வகைகளில் திமுகவும் தயாராகி வருகிறது என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தினர். மோடி ராமநாதபுரத்தில் நின்றாலும் இருக்காவிட்டாலும் இப்போதே களப்பணிகளை திமுக தயார்படுத்தி வருவதற்கான அடையாளமாக தான் இந்த மீனவர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது.
மேலும் ஜூலை 26 ஆம் தேதி திமுகவின் டெல்டா மண்டல பாக பொறுப்பாளர்கள் மாநாடு திருச்சியில் நடக்கிறது. ஒவ்வொரு மண்டலமாக நடத்தப்பட இருக்கிறது. இந்த வகையில் தென் மண்டல மாநாடு ராமநாதபுரத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்”என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
