ஹிப் ஆப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் திரைப்படம் ‘கடைசி உலகப் போர்’.
நாசர், நட்டி, அனஹா, அழகன் பெருமாள், முனிஷ் காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வருகின்ற செப்டம்பர் 20 ஆம்தேதி வெளியாக இருப்பதையொட்டி சென்னையில் நேற்று (செப்டம்பர் 11) மாலை இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட ஹிப் ஆப் ஆதி கடைசி உலகப் போர்திரைப்படம் குறித்து பேசியதாவது,
“தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் மூன்றாவதாக ஒரு ‘உலகப் போர்’ நடந்தால் உலகமே இருக்காது என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். போர், காதல், ஆக்ஷனுடன் சேர்த்து ஆழமான கருத்தையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கின்றன. இவற்றை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொண்டு, வரவேற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
சுந்தர். சி சார்தான் என் திறமைக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுத்து நான் நாயகனாக நடித்த படத்தையும் தயாரித்தவர். இப்போது இந்த ‘கடைசி உலகப் போர்’ படத்தை நானே தயாரித்திருக்கிறேன். இதிலிருந்து லாபம் வந்தால் மட்டுமே இனி திரைப்படங்களைத் தயாரிப்பேன்.
ஹிப் ஆப் தமிழா என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை இரண்டு பேராக ஆரம்பித்தோம். இப்போது எங்களுடன் 110 பேர் இருக்கிறார்கள். திறமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து கொண்டேயிருக்கிறோம்.
சினிமாவிற்கு வரும் இளம் தலைமுறைக்கு படிப்பு ரொம்ப முக்கியம். சினிமாவில் திறமை இருந்தால் சாதித்துவிடலாம். ஆனால், திறமையோடு படிப்பும் இருந்தால்தான் யாரிடமும் கை கட்டாமல் தலைநிமிர்ந்து இருக்கலாம். படிப்புதான் அந்த தைரியத்தைக் கொடுக்கும்.
இன்று நான் சினிமாவில் தோல்வியடைந்தாலும், கல்லூரியில் பேராசிரியராக என் வாழ்க்கையைத் தொடர்வேன். எனக்கு எந்தப் பயமுமில்லை. எனது இந்த தைரியத்திற்குக் காரணம் எனது படிப்புத்தான்.
அதனால்தான் திறமையோடு படிப்பும் ரொம்ப முக்கியம் என்று என் ரசிகர்களுக்கு அழுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்று ஆதி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது!
Chess Olympiad 2024: மிரட்டலான வெற்றியுடன் கணக்கை துவங்கிய இந்தியா!