”சிருங்கேரி மட ரகசியங்களை வெளியிடுவோம்” : அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை பதிலடி!

Published On:

| By christopher

"If Annamalai do arrogant politics, we will reply to them" : Selvaperunthagai

”தொடர்ந்து அருவருப்பான அரசியல், அகங்கார அரசியல் பேசினால், அண்ணாமலைக்கு தினமும் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இடையே வார்த்தை மோதல் நீடித்து வருகிறது.

’காங்கிரஸ் திமுகவின் அடிமை’ என்று அண்ணாமலை நேற்று விமர்சித்திருந்தார். மேலும் எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்தி குடும்பத்தினர் வெளிநாடுக்கு தப்பி சென்றதாகவும், காங்கிரஸின் வரலாறு 4 கட்சி தாவி வந்த செல்வப்பெருந்தகைக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று (ஜூலை 1) செய்தியாளர்களை சந்தித்து செல்வபெருந்தகை பேட்டியளித்தார்.

அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலையும், அவதூறுகளையும் பாஜக பரப்பி வருகிறது. தேசம் முழுவதும் அக்கட்சிக்கு மக்கள் மிகப்பெரும் பாடத்தினை கொடுத்துள்ளார்கள். இதனை புரிந்துகொண்டு அவர்களின் அநாகரீக அரசியலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

’இந்திராகாந்தியை பற்றியும், காங்கிரஸ் அரசியலை பற்றியும் தமிழ்நாடு காங்கிரஸ் அரசியல் குறித்து தலைவருக்கு தெரியாது’ என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் வரலாறு குறித்து  பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்து மகா சபை, ஜனசங் தொடங்கி பாஜக வரை பேசுவதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறாரா?

தமிழின விரோத போக்குடன் கன்னடிகா மனநிலையில் தான் அண்ணாமலை தற்போதும் இருக்கிறார். அவர், “தமிழனாக இருந்தாலும், காவிரி பிரச்சனையில் கன்னட மக்களுக்கு தான் உதவி செய்வேன்” என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதை வெளியிட்டால் அரசியலில் இருந்து அவர் வெளியேறி விடுவாரா?

பாஜக எங்களை தொட ஆரம்பித்தால், சிருங்கேரி மட ரகசியம், அங்கு யார் இருந்தார்? யாரால் அண்ணாமலை உருவாக்கப்பட்டார்? என்பது குறித்து பேசுவோம்.

காங்கிரஸை திமுகவின் அடிமைக்கட்சி என்கிறார். இந்த வார்த்தை எஜமானிடமிருந்து மட்டும் தான் வரும். ’நான் யாருக்கும் அடிமையில்லை. யாரும் எனக்கு அடிமையில்லை; என்று சொன்ன அம்பேத்கரை அவர் படித்துள்ளாரா?

தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக நான் பாடுபடுவேன். ஆனால் தன் கட்சி வேட்பாளர் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுபவர் அண்ணாமலை என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.

என்னை பல கட்சி மாறி வந்ததாக அண்ணாமலை கூறுகிறார். அதை அவரால் நிரூபிக்க முடியுமா? நான் ஆரம்பத்தில் தலித் இயக்கங்களில் மட்டும் தான் பணியாற்றியுள்ளேன். இந்த உண்மை கூட அவருக்கு தெரியவில்லை என்றால் அவரை எதன் அடிப்படையில் கட்சி தலைவராக நியமித்துள்ளார்கள் என தெரியவில்லை. அவர் வட்ட செயலாளராக கூட நியமிக்க தகுதியில்லாதவர்.

இப்படி தொடர்ந்து அருவருப்பான அரசியல், அகங்கார அரசியல் பேசினால், அண்ணாமலைக்கு தினமும் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ராகவா லாரன்ஸ் இத்தனை படங்களில் கமிட் ஆகி உள்ளாரா?

கள்ளச்சாராய மரண வழக்கு : உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share