யானை வேட்டை: நீதிமன்றம் சொன்ன யோசனை!

Published On:

| By admin

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே காட்டு யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது, தமிழகத்தில் காட்டு யானைகள் வேட்டையாடுதலை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(பிப்ரவரி 28) நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில், அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது யூகலிப்டஸ் போன்ற அந்நிய மரங்களை அகற்றுவதற்காக நபார்டு வங்கி ரூ. 6 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் ரூ. 7 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில், “நீலகிரி மலை ரயில் பாதை அருகில் கொட்டப்பட்டிருந்த 2387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரயிலில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக தண்ணீர் கேன்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கேரள வனத் துறையில் சார்பில், மலையாட்டூரில் 18 காட்டு யானைகள் வேட்டையாடப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த பெரியார் புலிகள் சரணாலய அலுவலரை நியமிக்க உள்ளதாகவும், மற்ற மாநில அரசுகள் முன்வந்தால் அலுவலர்களை ஒன்றிணைப்பது குறித்து தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. இதனைகேட்ட நீதிபதிகள், இதனை மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மூன்று அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே காட்டு யானைகள் வேட்டையை தடுக்க முடியும். வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றி தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும். கேரளாவில் உள்ள விலங்குகள் வேட்டை தொடர்பான முக்கிய வழக்குகளை, மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உட்படுத்தலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share