கொரோனா பாதிப்பு: எம்.எல்.ஏ.வை நலம் விசாரித்த முதல்வர்!

Published On:

| By Balaji

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கே.பழனி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிவாரணப் பொருள்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அண்மையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்த நிலையில், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 12ஆம் தேதி இரவு மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பழனியின் மகன்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம்,தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நேற்று பழனியின் மகன் செல்வத்திடம், அவரது உடல்நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இன்று காலை மற்றொரு மகன் வினோத்திடம் மீண்டும் அவரது உடல்நிலை குறித்த தகவல்களை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனியிடமே முதல்வர் போனில் பேசினார். அப்போது, அவரிடம் உடல்நிலையை நன்றாகப் பார்த்துக்கொள்ளுமாறும், வேண்டிய மருத்துவ உதவிகளை செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். முதல்வரிடம் தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த பழனி, நலம் விசாரித்ததற்காக நன்றியும் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

**எழில்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share