மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரமா? வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ கொடுத்த ஷாக்!

Published On:

| By christopher

icici bank raises minimum balance to 50000

ஐசிஐசிஐ வங்கி தனது புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை ரூ.10,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு வங்கியும் குறைந்த பட்ச இருப்புத் தொகையை பராமரிக்க கோருகின்றன. வங்கி தனது அன்றாட செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் முதலீடுகளை ஈடுசெய்வதற்காக குறைந்தபட்ச இருப்புத்தொகை பரமாரிக்கப்படுகிறது. அது இல்லாத பட்சத்தில் அதற்கான அபராத கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலித்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கடன் வழங்குநரான ஐசிஐசிஐ வங்கி தனது அனைத்து வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை (Monthly Average Balance) பெருமளவில் உயர்த்தியுள்ளது.

இந்த புதிய விதியானது கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு வங்கி கணக்கை தொடங்கிய தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இனி ரூ.10,000-க்கு பதிலாக ரூ.50,000 குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் புதிய வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.25,000 ஐயும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் ரூ.10,000 ஐயும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதே வேளையில் பழைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.10,000 ஆகவே உள்ளது. கிராமப்புற மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள பழைய வாடிக்கையாளர்களுக்கு மாத குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.5,000 ஆகவே உள்ளது.

ADVERTISEMENT

புதிய விதிமுறையின்படி, குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு, பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500, எது குறைவாக இருக்கிறதோ அது அபராதமாக விதிக்கப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம் நாட்டில் உள்ள வங்கிகளில் அதிகபட்ச குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ள வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.

மேலும் சேமிப்புக் கணக்கில் மூன்று முறை இலவசமாக ரொக்க வைப்புத்தொகையை அனுமதிக்கிறது, அதன் பிறகு வாடிக்கையாளர் ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 16 முதல் ஐசிஐசிஐ வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.25% குறைத்திருந்தது. ரூ.50 லட்சம் வரையிலான இருப்புத்தொகைக்கு வட்டி விகிதம் 2.75% ஆகவும், ரூ.50 லட்சத்திற்கு மேல் உள்ள இருப்புத்தொகைக்கு 3.25% ஆகவும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையையும் ஐசிஐசிஐ வங்கி கணிசமாக உயர்த்தியது, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share