இந்திய கடல் எல்லைக்கோடு அருகே ஒரு படகில் இருந்து கடலில் வீசப்பட்ட 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை இணைந்து கைப்பற்றியுள்ளன. ICG and Gujarat ATS seized 300 Kg narcotics worth Rs 1800 Cr Gujarat coast
இதுதொடர்பாக இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் “குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையின் (Anti Terrorist Squad) உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான தகவல்களின் அடிப்படையில் தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடற்கரை பகுதியில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் இந்திய கடலோர காவல் படையின் கப்பலை திசை திருப்பி போதை பொருளை இந்தியாவின் கடலோர எல்லைக்குள் (International Maritime Boundary Line) கொண்டு வரும் முயற்சியை நாங்கள் தடுத்து நிறுத்தி விட்டோம்.
மேலும் பயங்கரவாத எதிர்ப்பு படையின் நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்திய கடற்படை கப்பல் இருட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற படகை அடையாளம் கண்டு அதனை நோக்கி சென்றது. எனினும் இதனை தூரத்தில் இருந்தே அறிந்துகொண்டு படகில் இருந்த கடத்தல்காரர்கள் சுமார் 1800 கோடி ருபாய் மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருளை இந்திய கடல் எல்லைக்கோடு அருகே வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். எல்லைக்கோட்டை தாண்டியதால் பிடிபடும் முயற்சிகள் கைவிடப்பட்டது” என்று இந்திய கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வசம் பிடிபடாமல் தவிர்ப்பதற்காக போதை பொருளை கடலிலேயே தூக்கி எறிந்து இந்திய எல்லைக்கோட்டை கடத்தல்காரர்கள் தாண்டி விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் டிஜிபி விகாஸ் சஹாய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கடத்தல் முயற்சி குறித்து பயங்கரவாத எதிர்ப்பு படைக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும், போதைப் பொருள் ஒரு பெரிய சரக்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பாக கூட்டு நடவடிக்கைக்காக பயங்கரவாத எதிர்ப்பு படை உடனடியாக இந்திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்டது.
பிறகு இந்திய கடலோர காவல்படையின் கப்பலை பார்த்ததும் கடத்தல்காரர்கள் 300 கிலோ போதைப்பொருளை கடலில் வீசிவிட்டு இந்திய கடல் எல்லைக்கோட்டை தாண்டி தப்பி விட்டனர். அங்கிருந்து போதைப் பொருள் கடலில் மீட்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணைக்காக பயங்கரவாத எதிர்ப்பு படையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
