உலகக் கோப்பை திருவிழா தற்போது அதன் கிளைமேக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு இன்னும் 4 போட்டிகள் தான் மீதமிருக்கிறது. ICC world cup 2023 NZvsSL
போட்டியை நடத்தும் இந்தியா 16 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக தலா 12 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளன.
எனவே 4வது அணியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 4, 5, 6வது இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இன்று (நவம்பர் 9) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 42வது லீக் போட்டியில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோத உள்ளன.
மழை குறுக்கிட்டால் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதும் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் போட்டி நடைபெறும் பெங்களூருவில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை 90 சதவீதம் மழைக்கு வாய்ப்பிருக்கும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. இதனால் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி நிறுத்தப்படலாம்.

போட்டி நடைபெறவில்லை என்றால் நியூலாந்து, இலங்கை அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும். அவ்வாறு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டால் தற்போது 8 புள்ளிகள், +0.398 ரன் ரேட் உடன் 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து 9 புள்ளிகளுடன் இருக்கும். இவ்வாறு நடைபெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் +0.036 ரன் ரேட் உடன் 5வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் உண்மையில் கைவிடப்பட்டால், நவம்பர் 11 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் 10 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறும். இதனால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் நியூசிலாந்து தனது அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும்.

ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் கைவிடப்பட்டால், நாளை நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன் ரேட் -0.338 ஆக உள்ளதால், பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேற ஆப்கானிஸ்தான் கணிசமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும். ICC world cup 2023 NZvsSL
எனவே அடுத்தடுத்த லீக் போட்டிகள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விருந்தளிக்கும் என்பது உறுதி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
