ஐசிசி 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று (அக்டோபர் 3) தொடங்குகிறது.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி!
ஆடவர் டி20 போட்டிக்கு இணையாக மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது ஐசிசி.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடர் இதுவரை 8 முறை நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 6 முறை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.
இதுவரை கோப்பையை வெல்லாத இந்திய மகளிர் அணி 2020 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றதே டி20 உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச சாதனையாகும்.
வங்கதேசத்தில் இருந்து மாற்றம் ஏன்!
இந்த நிலையில், 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்து துபாய் மற்றும் சார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடைபெறுகின்றன.
வங்காளதேசத்தில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) தான் போட்டியை நடத்தும் நாடாக உள்ளது.
லீக், அரையிறுதி, இறுதிப்போட்டி விவரம்!
இந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்படுள்ளன.
அதன்படி ஏ பிரிவில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், பி பிரிவில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் ‘லீக்’ சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதன்படி வரும் 15ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகின்றன. தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டி துபாயில் அக்டோபர் 17ஆம் தேதியும், 2-வது அரையிறுதி போட்டி ஷார்ஜாவில் 18ஆம் தேதியும், இறுதிப்போட்டியானது துபாயில் அக்டோபர் 20ஆம் தேதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.
இந்தியாவின் முதல் போட்டி!
ஏ பிரிவில் பலம் வாய்ந்த அணிகளுடன் உள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நாளை நடைபெற உள்ள தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இன்று துபாயில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் – ஸ்காட்லாந்து (மாலை 3.30) அணிகள் மோத உள்ளன. அதைத்தொடர்ந்து நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை (இரவு 7.30) அணிகள் மோத உள்ளன.
இருமடங்காக உயர்ந்த பரிசுத்தொகை!
முதன்முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பை பரிசுத்தொகையாக ரூ. 66 கோடியே 64 லட்சம் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை காட்டிலும் 225 சதவீதம் அதிகமாகும்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ. 19 கோடியே 59 லட்சமும், 2 ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 9 கோடியே 79 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது.
இதுதவிர லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கும் இம்முறை பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளை எப்படி பார்க்கலாம்?
இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்படவுள்ளது. அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’அதிகாரத்த கையில எடுக்கிறது தப்பே இல்ல’: என்கவுன்ட்டருக்கு வேட்டையன் ரஜினி ஆதரவு!
ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு: பணம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!