2021 ஐபிஎல் தொடரில் 635 ரன்கள் சேர்த்து ‘ஆரஞ்சு’ தொப்பியை வென்ற ருதுராஜ் கெய்க்வாத், அதே ஆண்டில் ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார்.
அப்போது துவங்கி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாட வாய்ப்பு பெற்ற ருதுராஜ் கெய்க்வாத், 2023 ஐபிஎல் தொடரில் 590 ரன்கள் குவித்து அசத்தினார். அதை தொடர்ந்து, 2023 ஆசிய போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த ருதுராஜ் கெய்க்வாத்க்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் இந்திய அணியை தங்கப்பதக்கம் வெல்ல வைத்தார், ருதுராஜ் கெய்க்வாத்.
இதை தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய ருதுராஜ், 5 இன்னிங்ஸ்களில் 1 சதம், 1 அரைசதம் உட்பட 223 ரன்களை குவித்தார். இதை தொடர்ந்து, ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அதிரடியாக 56 இடங்கள் முன்னேறி 7வது இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து, இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாத் 583 ரன்கள் குவித்து மீண்டும் அசத்தினார்.
இப்படியான சூழலில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் விளையாட ருதுராஜ் கெய்க்வாத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தொடரின் 2வது போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி 77 ரன்கள் குவித்த ருதுராஜ், 3வது போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கி 28 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அசத்தினார்.
3 போட்டிகளில் 133 ரன்கள் சேர்த்துள்ள ருதுராஜ் கெய்க்வாத், இந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட புதிய டி20 பேட்டிங் தரவரிசையில், மீண்டும் டாப் 10-க்குள் நுழைந்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாத். அவர் 13 இடங்கள் முன்னேறி தற்போது 7வது இடம் பிடித்துள்ளார்.
இந்த தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்தின் பில் சால்ட் முதல் 3 இடங்களில் தொடர்கின்றனர்.
மறுபுறத்தில், யசஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் பின்தங்கி 10வது இடத்திற்கு சென்றுள்ளார்.
அதேபோல, இந்த தொடரில் 3 போட்டிகளில் 6 விக்கெட்களை கைப்பற்றியுள்ள ரவி பிஸ்னாய், டி20 பவுலிங் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார்.
இப்பட்டியலில், அக்சர் பட்டேல் 9வது இடத்திலும், குல்தீப் யாதவ் 11வது இடத்திலும், ஜஸ்ப்ரிட் பும்ரா 14வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்தின் அதில் ரஷீத் முதலிடத்தில் தொடர்கிறார்.
டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில், ஹர்திக் பாண்டியா 2வது இடத்திற்கு பின்தங்கியுள்ள நிலையில், இலங்கையின் வனிந்து ஹசரங்கா மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ரத்து: என்ன காரணம்?
பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனுதவி: விண்ணப்பிப்பது எப்படி?
IND vs ZIM: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி!
பியூட்டி டிப்ஸ்: கண்ணாடியைத் தவிர்க்க உதவுமா கண் அறுவை சிகிச்சை?