T20 World Cup 2024: 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. ஜூன் 6 அன்று, இப்போட்டி டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரைரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், அமெரிக்க அணியின் கேப்டன் மொனன்க் படேல் முதலில் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். முன்னதாக, அமெரிக்க அணி இதே மைதானத்தில் கனடாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில், 2வதாக பேட்டிங் செய்தே ஒரு இமாலய வெற்றியை பதிவு செய்திருந்தது.
டாஸை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அமெரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அந்த அணி பவர்-பிளே முடிவில் 3 விக்கெட்களை இழந்து 30 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

இதை தொடர்ந்து, பாபர் அசாம் – ஷதாப் கான் இணைந்து பொறுப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஷதாப் கான் 40 (25) ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாபர் அசாம் 44 (43) ரன்களுக்கு வெளியேறினார்.
மீண்டும் தடுமாறிய பாகிஸ்தான் அணிக்காக, இறுதியில் ஷாஹீன் அப்ரிடி 23 (16) ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் சேர்த்தது. அமெரிக்காவுக்காக நோஸ்த்துஸ் கெஞ்சிகே 3 விக்கெட்களையும், 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வழங்கி சவுரப் நேத்ரவால்கர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கனடாவுக்கு எதிராக 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18 ஓவர்களில் எட்டிய அமெரிக்கா, இப்போட்டியில் 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் மோனக் படேல் & ஸ்டீவன் டெய்லர் நல்ல துவக்கம் அளிக்க, பவர்-பிளே முடிவில் அமெரிக்கா 44 ரன்கள் சேர்த்தது.

டெய்லர் 12 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஆன்ட்ரிஸ் கோஸ், மொனன்க் படேலுடன் இணைந்து சீரான வேகத்தில் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். ஆன்ட்ரிஸ் கோஸ் 35 (26) ரன்களுக்கும், மொனன்க் படேல் 50 (38) ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேற, அமெரிக்க அணி சற்று பின்னடைவை சந்தித்தது.
ஆனால், அடுத்து களமிறங்கிய முதல் போட்டியின் நாயகனான ஆரோன் ஜோன்ஸ் 36 (26) ரன்களும், நிதீஷ் குமார் 14 (14) ரன்களும் சேர்க்க, அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது.
இதை தொடர்ந்து, சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்க அணிக்கு, ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஹர்மீத் சிங் களமிறங்கி 6 பந்துகளில் 18 ரன்கள் குவித்து அசத்தினர்.

பாகிஸ்தான் வெற்றி பெற 19 ரன்கள் தேவை என்ற நிலையில், அமெரிக்காவுக்காக சவுரப் நேத்ரவால்கர் அந்த ஓவரை வீசினார். அவர் வீசிய 6 பந்துகளில் பாகிஸ்தான் அணி வீரர்கள் 13 ரன்கள் மட்டுமே சேர்க்க, அந்த அணிக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி ஒரு சூப்பர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இப்போட்டிக்கு முன்னதாக, அமெரிக்க அணியின் கேப்டன் மொனன்க் படேல், “பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் நாங்கள் 30-40 நிமிடங்கள் நன்றாக விளையாடினால் போதும். உங்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறலாம்”, என தெரிவித்திருந்தார். அதேபோல, இப்போட்டியில் அமெரிக்க அணிக்கு மொனன்க் படேல் வெற்றியையும் பெற்று தந்துள்ளார். மேலும், இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்திற்காக, மோனக் படேல் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 4 புள்ளிகளுடன் அமெரிக்க அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே பிரிவில் இந்தியா 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: காரில் போகும்போது வரும் வாந்தி… தடுப்பது எப்படி?
பியூட்டி டிப்ஸ்: அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் ராகுல்காந்தி வழக்கு வரை!
கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை
டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி… அண்ணாமலைக்கு எதிராக வெடிக்கும் தமிழிசை- அமித் ஷா கொடுத்த சிக்னல்!
