அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்து உரிமையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. icc confirmed next host of wtc final
கிரிக்கெட்டில் பாரம்பரிய போட்டியாக 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி கருதப்படுகிறது. தற்போது ஒருநாள் போட்டியை கடந்து டி20, டி10 போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி கடந்த 2019ஆண்டு அறிமுகம் செய்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடரின் இறுதிப்போட்டியானது இதுவரை மூன்று முறை நடந்துள்ளது. அவை அனைத்தும், கிரிக்கெட்டின் தாயகமாக கருதப்படும் இங்கிலாந்து மண்ணில் நடந்தன.
இதனையடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தங்கள் நாடுகளில் நடத்த இந்தியா (பிசிசிஐ), ஆஸ்திரேலியா (சிஏ) உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் ஐசிசி வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. அதன் முடிவில், வரவிருக்கும் மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்ட ஊடக அறிக்கையில், “2025 ஆம் ஆண்டு ICC ஆண்டு மாநாட்டின் போது, கடந்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து அடுத்த மூன்று 2027, 2029 மற்றும் 2031 உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டிகளுக்கான ஹோஸ்டிங் உரிமை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு (ECB) வழங்கப்பட்டது” என ஐசிசி தெரிவித்தது.
முதன் மூன்று WTC இறுதிப் போட்டிகள் முறையே இங்கிலாந்தின் செளத்தாம்டன் (2021), ஓவல் (2023), மற்றும் லார்ட்ஸ் (2025) மைதானங்களில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திமோர்-லெஸ்டே கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் ஜாம்பியா கிரிக்கெட் யூனியன் ஆகிய இரண்டு புதிய இணை உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டது ஐசிசி மாநாட்டில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஐசிசி இணை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
