அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையை ஐசிசி இன்று (மே 15) அறிவித்துள்ளது. ICC announce prize money for WTC 2025 final
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா.
சொந்த மண்ணில் இந்தியாவுடனான தொடரை சமன் செய்தாலும், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.
மொத்தம் 12 போட்டிகளில் 8 வெற்றி 1 டிரா மற்றும் மூன்று தோல்வியுடன் அந்த அணி 69.44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர் வெற்றிகள், சொந்த மண்ணில் இந்தியா மற்றும் நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான தொடர் வெற்றிகள் உட்பட 19 டெஸ்ட் போட்டிகளில் 13 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா 67.54 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இதனையடுத்து இரு அணிகளும் வரும் ஜூன் 11 முதல் 15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணிக்கு மிகப்பெரும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணிக்கு 16 லட்சம் அமெரிக்க டாலர்கள், இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இதே தொகைத் தான் கடந்த 2023ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டி தொடர் முடிவிலும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2023-25 WTC தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மொத்த பரிசுத் தொகையாக 57.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இரண்டு போட்டிகளின் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறவிருக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி 36 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை பெறும். தோல்வியடையும் அணிக்கு 21.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.
இதுதொடர்பாக ஐசிசி சேர்மன் ஜெய் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “தென்னாப்பிரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான #WTC25 இறுதிப் போட்டியின் வெற்றியாளர் $3.6 மில்லியன் பரிசுத்தொகையைப் பெறுவார் என்றும், இரண்டாம் இடம் பெறுபவர் $2.1 மில்லியன் பரிசுத்தொகையைப் பெறுவார் என்றும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பரிசுத் தொகை அதிகரிப்பு, டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னுரிமைப்படுத்துவதற்கும், முந்தைய WTC சுழற்சிகளின் உத்வேகத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் எடுக்கும் முயற்சிகளைக் காட்டுகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.