சிறந்த சுழற்பந்து வீச்சுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை முதல் டெஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது என்று முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த 9ம் தேதி நாக்பூரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சைக் கண்டு பயப்படும் ஆஸ்திரேலியா அணி, முதல் டெஸ்ட் போட்டியில் போட்டி போட்டு விக்கெட்டுகளை அள்ளிய இந்தியாவின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் – ஜடேஜாவின் பவுலிங்கை கண்டு மிரண்டு போயுள்ளனர்.
அதிலும் முதல் டெஸ்ட் தொடரில் தழுவிய மோசமான தோல்விக்கு பிறகு நாக்பூர் பிட்ச் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
போட்டிக்கும் முன்பும், போட்டி நடக்கும்போதும் நாக்பூர் பிட்சை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இந்நிலையில் போட்டி முடிந்தபின்பும் அதனை தொடர்ந்து வருகின்றனர்.
அடுத்த டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக நாக்பூர் விதர்பா மைதானத்தில் பயிற்சி பெற விரும்பினர்.

இந்நிலையில் பயிற்சி பெறுவதற்கு முன்பு பிட்சை ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் சோதித்து பார்த்தார். பிட்ச் பயன்படுத்த முடியாத அளவிற்கு கரடுமுரடாக இருந்ததை அடுத்து பயிற்சி பெறுவதை ரத்து செய்துள்ளனர்.
இதனால் போட்டி முடிந்த நிலையிலும் இன்னும் பிட்ச் மீதான புகார்களை ஆஸ்திரேலியா வீரர்கள் கூறி வருவது தொடர்கதையாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் பலவீனம் அம்பலம்
இதுகுறித்து ஈஎஸ்பிஎன் பத்திரிக்கையில் எழுதியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், “கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலுவான பதிலடியை கொடுக்க விரும்பினால், பிட்ச் குறித்து குறைகூறுவதை விடுத்து, அதற்கேற்ப தங்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.
நாக்பூர் பிட்ச் ஒன்றும் விளையாடவே முடியாத ஒன்று அல்ல. ஆனால் சிறந்த சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை முதல் டெஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. இதனை அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். அதனை ஏற்க மறுத்தால், இன்னும் மோசமான தோல்வியை சந்திக்க இது வழிவகுக்கும்.
அதேநேரத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றிபெறும் கலையைக் கற்றுக்கொண்ட சிறந்த டெஸ்ட் அணியாக இந்தியா வளர்ந்துள்ளது” என்று அதில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா