குஜராத்தின் ஜாம்நகரில் நேற்று (ஏப்ரல் 2) இரவு வழக்கமான பயிற்சிப் பயணத்தின் போது ஒரு ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்தபோது விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். ஒரு விமானி பாதுகாப்பாக வெளியேற முடிந்தது, மற்றொரு விமானி காணாமல் போனார். அவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக விமானப் படை அறிவித்துள்ளது.
மூத்த IAF அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை இரவே சென்று பார்வையிட்டனர்.

“விபத்துக்கு முன்பு ஒரு விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை மீட்க முடியவில்லை. விமானம் தீப்பிடித்தது. காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணாமல் போன விமானியைத் தேடத் தொடங்கினர்,” என்று ஜாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்சுக் தேலு கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்தது. IAF Jaguar aircraft crashed
விபத்துக்குப் பிறகு, ஒரு பெரிய புகை மேகம் கிளம்பியது. எரிந்தபடியே விமானத்தின் பாகங்கள் தரையில் சிதறிக்கிடந்தன. காயமடைந்த விமானிகளுக்கு உதவ உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக ஆரம்ப அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய விமானப் படை இன்று (ஏப்ரல் 2) காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“ஜாம்நகர் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட ஐஏஎஃப் ஜாகுவார் இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் நேற்று (ஏப்ரல் 2) இரவு நேரப் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. விமானிகள் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டு வெளியேற்றத்தைத் தொடங்கினர்,
இதனால் விமானநிலையம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, ஒரு விமானி காயம்பட்டு உயிரிழந்தார். மற்றொரு விமானி ஜாம்நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர் இழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது மற்றும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. IAF Jaguar aircraft crashed
விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி, ஹரியானாவின் அம்பாலாவில் பயிற்சிப் பயணத்தின் போது ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானது. அதுவும் தொழில் நுட்ப காரணம் என சொல்லப்பட்டது. ஒரு மாத காலத்துக்குள் இன்னொரு ஜாகுவார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதையும் தொழில் நுட்பக் காரணம் என்றே விமானப் படை குறிப்பிடுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பே ஜாகுவார் தொழில்நுட்பக் கோளாறால் விபத்தில் சிக்கிய நிலையில், அது தொடர்பாக முறையாக ஆய்வு, விசாரணை நடந்ததா என்ற விவாதங்கள் இதன் மூலம் எழுந்திருக்கின்றன. IAF Jaguar aircraft crashed