ரோஹித் ஆட்டத்தை இனிமேல் பார்க்க மாட்டேன்- தினேஷ் அகிரா

Published On:

| By Kavi

ரோஹித் ஷர்மா ஆட்டத்தை இப்போதெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஹைலைட்ஸோடு சரி. Cricinfo கமெண்டரியே போதுமானதாக இருக்கிறது. அதிலும்கூட என்ன புதிதாக வர்ணித்துவிடப் போகிறார்கள்? Magnificient, Magestic, Carnage, Elegance… ஒரே திகட்டல். ரோஹித்தின் பேட்டிங்கைப் போலவே. இதற்கும் ரோஹித்தின் தீவிர விசிறியாக இருந்தவன் நான்.

ரோஹித் வசீகரத்தை இழந்துவிட்டார். எப்போது, எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள். அதை நீங்கள் உணரத்தான் வேண்டும். பழைய ரோஹித்தை நினைத்துப் பார்க்கிறேன். 2007–2013 காலத்திய ரோஹித். பித்தின் உச்சத்தில் மட்டை வீசிய ரோஹித். 2007 T–20 உலகக்கோப்பை தொடர். தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி அது.

அப்போதுதான் அவருடைய பேட்டிங் எனக்கு அறிமுகம். குறைகள் நெளிகின்றன நளினமாக. தலை ஆஃப் சைடில் சாய்கிறது. கரங்கள் கிராஸ் பேட் போடுகின்றன. ஆட்டத்தில் கட்டுப்பாடு இல்லை ; ஆனால் ஒருவித லயம் இருந்தது.

ரோஹித்திடம் ஏதோவொன்று கூடுதலாக இருப்பதாக தோன்றியது. அது சரிதானா என்கிற குழப்பம் வேறு. இருப்பினும் ஒரு இனம் புரியாத பரவசம். சர்ப்பம் பாய்ந்த வீட்டில் இரவைக் கழிப்பது போல. ஒரு மேதையை இனம்கண்ட பெருமிதமாக இருக்கலாம். யானையை முதன்முதலில் பார்த்த தருணம் ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது. ஐந்து வருடத்தில் 2 சதங்கள், 30 சொச்சம் சராசரி. என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். என் மனதில் பட்டதைச் சொல்லிவிடுகிறேன். ரோஹித்தின் பொற்காலம் அதுதான்.

புலியை நேரில் பார்ப்பது ஒரு அனுபவம். புலிக் கதைகளை கேட்டு வளர்வது ஒரு அனுபவம். ‘ரஞ்சி தொடரில் முச்சதம் அடித்தார்’. ‘ரோஹித்தின் கடைசி ஓவர் திரில்லர்’. ‘சச்சினுக்கு நிகரான திறமையாளர்’. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் புலிக் கதைகள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் புலியைப் பார்க்க முடியாது. அவ்வப்போது தென்படும் ஒருசில பாய்ச்சல்களோடு சரி. அதுவொரு காவிய சோகம். அப்படித்தான் அது இருந்தாக வேண்டும்.

I wont watch Rohit play anymore Dinesh Akira

ரோஹித்தின் அன்றைய ஸ்டான்ஸ் நினைவிருக்கிறதா? கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் ஓர் அரைவட்டத்தை வரைந்துவிடலாம். ஒருகாலத்தில் சச்சினின் ஸ்டான்ஸ். அரவிந்த் டி சில்வாவின் ஸ்டான்ஸ். இன்சமாமின் ஸ்டான்ஸ். ஆசியர்களின் ஸ்டான்ஸ். கிழக்கின் மகத்துவம்! பிறை நிலவைப் போன்ற அது அத்தனை அழகு.

ரோஹித் ஒரு பொன்னுலகக் கற்பனையாக எஞ்சியிருந்தார். 2013இல் அரியணைக்கு அருகே சென்றுவிட்டார் கோலி. ரோஹித் அன்றைக்கே தனது மட்டைக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். காலத்துக்கும் விதியை நொந்துகொள்ள எனக்கொரு வாய்ப்பு அது. ரோஹித்தும் இந்தியாவின் விக்டர் டிரம்பர் ஆகியிருப்பார். ஆனால் விதி.

விதியை மாற்றிய தோனி

ரோஹித் என்ற ஐடியாவைத் திருப்பி எழுதினார் தோனி. ஒருநாள் கிரிக்கெட்டின் துவக்க வீரர்: ஒரு மேதை ஆடக் கூடாத இடம். சச்சின் தன் சுயத்தைத் தொலைத்த இடம். ரோஹித்தின் டெக்னிக் இறுகியது. பேட் ஸ்விங் குறைந்தது. பேட்லிஃப்ட் நேரானது.

காட்டுமிருகம் சாந்தமானது. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம். கிரிக்கெட் உலகம் ரோஹித்தை உச்சிமுகர்ந்தது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி பெருகியது. இருந்தும் அவருடைய ஆட்டத்தில் எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

குறிப்பாக மதிமயங்கி அவர் ஆடுகையில்; சதத்தை எட்டியதும் அவர் ஆடுகிற ஆட்டம். உண்மையில் அதெல்லாம் எனக்குப் போதவில்லை.

அப்போதுதான் கோலி கைகொடுத்தார். ஒரு செஷனில் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர் ரோஹித் என்றார். உள்ளபடி எனக்கெல்லாம் ரொம்பவே வருத்தம். பேரரசருக்கு ஒரு சிற்றரசர் பரிந்துப் பேசுவதா? வேறு வழியில்லை. நிலைமை அப்படி. டெஸ்டில் ரோஹித்துக்கு மிடில் ஆர்டரில் இடம். இறுக்கம் இல்லாமல் ஆடினார்.

அறிமுக தொடரில் இரண்டு சதங்கள். அதற்குப் பிறகு ரோஹித் என்னுடைய வழிக்குவந்தார் . சராசரியாக 20 அல்லது 30 சொச்சம் ரன்கள்தான் அடிப்பார். ஆனால் அதில் ஒரு சமத்துவம் இருக்கும். நீங்கள் அதை ரசிக்கலாம்; வெறுக்கலாம்; சபிக்கலாம். எல்லாவற்றுக்கும் அவருடைய ஆட்டத்தில் இடமுண்டு. எப்போது விக்கெட் விழும் என்று தெரியாது.

அதுவே ரோஹித்தின் டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்கியது. அவருக்காக காவு வாங்கப்படும் பெயர்கள் நம்பிக்கை அளித்தன. ரஹானே, புஜாரா முதலியன.

I wont watch Rohit play anymore Dinesh Akira

ஒருநாள் கிரிக்கெட்டின் ஹீரோ; டெஸ்டில் டிராஜிக் ஹீரோ! எத்தனை அழகான முரண் இது. அதுதான் ரோஹித் என்ற ஐடியாவை ரசிக்கவைத்தது. இது ஓரிரு தொடருடன் முடியவில்லை. ஆண்டுக்கணக்கில் நீடித்தது. சுனாமிக்கு காத்திருத்தல். அணி நிர்வாகம் அப்போது என்ன நினைத்திருக்கும்? அதை விட்டுத்தள்ளுங்கள். ரோஹித்தின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? என்னளவில் ரோஹித் என்ற ஐடியா சரியான திசையிலே சென்றுகொண்டிருந்தது.

ஆனால் 2019 உலகக்கோப்பை நம்பிக்கையை தகர்த்தது. ஐந்து சதங்கள். கிரிக்கெட் உலகம் கண்ணில் ஒத்துக்கொண்டது. ஆனால் எனக்கு திருப்தி இல்லை. அடுத்த வரவிருக்கும் ஆபத்து மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தது.

திடீரென்று ரோஹித்தின் தோற்றம் மாறிவிட்டது ஆட்டம் கூர்மை பெற்றது. ஆனால் கொஞ்சநஞ்ச சாகஸமும் வடிந்துவிட்டது. இரண்டாயிரத்துக்குப் பிறகு சச்சினுக்கும் இதுவே நேர்ந்தது. A mechanical artist!

காட்டின் நினைவுகளை மறந்த புலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரர் வாய்ப்பு. ரோஹித் என்கிற ஐடியா பின்னுக்குச் சென்றது. இந்தமுறை ரோஹித் மீதே முதல்முறையாக நம்பிக்கை பிறந்தது. எனது நம்பிக்கையை காப்பாற்ற ரோஹித்துக்கு ஒரு கடைசி வாய்ப்பு.

குறைந்தபட்சம் வீரேந்தரையாவது விஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் விதி இம்முறையும் சதி செய்தது.

ரோஹித் முழுமையான ஒரு டச் ஆர்டிஸ்ட் என மாறிப்போனார். காட்டின் நினைவுகளைப் புலி சுத்தமாக மறந்துவிட்டது. இன்று அவருடைய பேட்டிங் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு டெம்ப்ளேட்.

அதீத நேர்த்தியும் கவனமும் ரோஹித் என்ற ஐடியாவை தின்றுவிட்டன. ரோஹித் ஷர்மா ஆட்டத்தை இனி எப்போதும் நான் பார்க்கப்போவதில்லை!.

காணும் பொங்கல்: சென்னை கடற்கரைகளில் ஒரு லட்சம் பேர்; 235 டன் குப்பை!

கிச்சன் கீர்த்தனா : டேஸ்ட்டி பிரெட் டிரையாங்கிள்ஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share