புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, திரைப்பட நடிகர் பார்த்திபன் சந்தித்தார். அப்போது கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்கு கட்டணத்தை குறைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடத்தில் பேசிய பார்த்திபன்,’ நடிகர் விஜய்யின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக பார்க்கிறேன். கமல் அரசியலுக்கு வரும்போது கூட இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என்று கூறினார்கள். அதுபோல விமர்சனங்கள்தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால், அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது. எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது. நானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிப்பேன். என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது.
புதிய பாதை தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் உள்ளது. ஆனால், அது இப்போதைக்கு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை, பாதுகாப்பு தேவை என கூறி நாம் தான் அவர்களை பலவீனம் ஆக்கி விடுகிறோம்.
ஒரு ஆணை விட பெண்தான் வலிமையானவர். நயன்தாரா, தனுஷ் இடையிலான கருத்து வேறுபாடு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு பக்கம் தனுஷ், ஒரு பக்கம் நயன்தாரா. இதில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த அவர்கள், முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நாம் பார்வையாளர்கள் அதனால் இருவரையும் ரசிப்போம்.
ஏ.ஆர். ரஹ்மான் ஜென்டில்மேன். அதனால்தான் விவாகரத்து அறிவித்தாலும் யாரும் அவரை தவறாக விமர்சிக்க வேண்டாமென்று அவரின் மனைவியே கூறியுள்ளார். ரஹ்மானுக்கு இசையை தவிர வேறு எதுவும் தெரியாது. திமுக ஆளும் கட்சி என்பதால் விஜய் விமர்சித்து பேசுகிறார். இதில், தவறு இருப்பதாக நான் பார்க்கவில்லை. சீமானின் பேச்சையும் நான் ரசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே,நடிகர்கள் தமிழக அரசியலில் குவிந்து கிடக்க இப்போது பார்த்திபனும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஈ.சி.ஆரில் 100 பைக்குகள் பறிமுதல்… சில்வண்டுகளை பொறி வைத்து பிடித்த போலீஸ்