ADVERTISEMENT

இனி படம் இயக்கப்போவதில்லை: ‘பிரேமம்’ இயக்குனரின் அதிர்ச்சி பதிவு!

Published On:

| By Kavi

premam director peter alphonse

நிவின் பாலி, நஸ்ரியா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் தயாரான ‘நேரம்’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

இந்த படம் வெளியான நேரத்தில் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பிஸ்தா’ பாடல், அநேக இடங்களில் ரிப்பீட் மோடில் இசைத்தது என்றே கூற வேண்டும்.

ADVERTISEMENT

அவரின் 2வது படம் பற்றி விவரிக்கவே தேவையில்லை. ‘பிரேமம்’. காதலின் பல்வேறு பரிமாணங்களை காட்டி, அனைவரையும், குறிப்பாக இளைஞர்களை திரை முன் கட்டிப்போட்ட படம்.

இப்படம் வெளியான காலத்தில், கல்லூரி கலை நிகழ்ச்சிகள் என்றாலே வெள்ளை வேட்டியும், கருப்பு சட்டையும் தான் என, இளைஞர்கள் மத்தியில் ஒரு ட்ரெண்டே உருவானது.

ADVERTISEMENT

இந்த ட்ரெண்டை பின்பற்றாத இளைஞர்களே இல்லை என்று கூட கூறலாம். மறுபுறம், மலர் டீச்சருக்காகவே இப்படத்தை திரும்ப திரும்ப பார்த்த ரசிகர் பட்டாளமும் உண்டு.

ADVERTISEMENT

இப்படத்தில், இவர் காட்டிய ஒவ்வொரு நுணுக்கமும், நேர்த்தியான உருவாக்கமும், ஒவ்வொரு முறை நாம் இப்படத்தை பார்க்கும்போது, ஒரு புதிய காட்சி அனுபவத்தை தரும்.

இப்படியான, 2 அழகிய படங்களை வழங்கிய அல்போன்ஸ் புத்திரன், 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்வி ராஜ், நயன்தாரா நடிப்பில் ‘கோல்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். 2022ம் ஆண்டு வெளியான இந்த படம், ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்போது ‘கிப்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

முழுக்க முழுக்க தமிழ் படமாக தயாராகவுள்ள இந்த ‘கிப்ட்’ படத்தில், சாண்டி மற்றும் கோவை சரளா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படி, அடுத்த படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், “என்னுடைய திரை சினிமா வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன்”, என்ற பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார், இந்த அல்போன்ஸ் புத்திரன்.

அந்த பதிவில், தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாகவும், அதை நேற்று தான்  அறிந்துகொண்டதாகவும், இனிமேல் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு இந்த குறைபாடு குழந்தை பருவத்தில் இருந்தே இருந்துள்ளதாகவும், தனது பதிவில் அல்போன்ஸ் புத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எனக்கு சினிமாவை விட்டு பிரிய விருப்பம் இல்லை. ஆனால், எனக்கு இப்போது வேறு வழியும் இல்லை”, எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாக, பாடல்கள், வீடியோக்கள் மற்றும் ஷார்ட் ஃபிலிம்களை தொடர்ந்து இயக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆரோக்கியமாக இல்லாமல் இருப்பதற்கு மன்னித்துவிடுங்கள்”, எனக் குறிப்பிட்டு அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ள இந்த பதிவு, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, இன்ஸ்டாவில் இருந்து அல்போன்ஸ் புத்திரன் தனது போஸ்ட்டை நீக்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

வருத்தப்படுறதா… சந்தோஷப்படுறதா…? : அப்டேட் குமாரு

இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு : சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share