ஒரு பிரிவினரையும் புண்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படிதான் சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது ஒழித்து கட்ட வேண்டும்” என்று பேசியிருந்தார்.
உதயநிதியின் பேச்சு நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. உதயநிதிக்கும் எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் செயலில் ஈடுபட கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு. இந்தியா என்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை.
ஒரு பிரிவினரை புண்படுத்தும் எந்த விஷயத்திலும் நாம் ஈடுபடக்கூடாது. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். சனாதன தர்மம் ரிக் வேதம், அதர்வ வேதங்களிலிருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம்.
எனது அரசால் பல அர்ச்சகர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்கள் சமய சடங்குகளை மேற்கொள்கின்றனர்.
எந்த பிரிவினரையும் புண்படுத்தும்படி கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்பது அனைவருக்கும் எனது பணிவான வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா