அயோத்தி – பாபர் மசூதி வழக்கில் தீர்வு காண கடவுளிடம் வேண்டினேன் என்ற இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கும், அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தான் பாஜக துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வந்தது.
இந்தியாவின் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி தொடர்பான சட்டப் போராட்டம் 1885 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இந்துத்துவா அமைப்பினர் பாபர் மசூதியை இடித்தனர். இது பெரும் கலவரமாக வெடித்தது.
நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்தது. மேலும், முஸ்லிம்களுக்கு வேறொரு இடத்தில் மசூதி கட்டுவதற்கு இடமளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.
இந்த தீர்ப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் இந்தாண்டு ஜனவரி மாதம் ராமர் கோயிலுக்கு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
அப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த 5 பேர் அடங்கிய அமர்வில் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட்டும் ஒருவர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் ஓய்வுபெறப்போகும் சந்திரசூட்டுக்கு மகாராஷ்டிரா மாநிலம் கெட் தாலுகாவில் உள்ள அவரின் சொந்த ஊரான கன்ஹேர்சர் கிராமத்தில் பாராட்டு விழா நேற்று (அக்டோபர் 20) நடத்தப்பட்டது.
வேண்டிய பிறகே தீர்ப்பு வெளியானது!
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “எளிதில் தீர்வுக்கு வரமுடியாத வழக்குகளும் எங்கள் முன் வரும். சொல்லப்போனால், அத்தகைய வழக்குகளில் ஒன்றுதான் அயோத்தி வழக்கும்.
பாபர் மசூதி வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. அதில் தீர்வு காண்பது கடினம். அந்த வழக்கு மூன்று மாதங்களாக என் முன்னே இருந்தபோது, நான் கடவுளின் முன் அமர்ந்து, ‘இந்த வழக்கில் ஒரு தீர்வு வர வேண்டும்’ என வேண்டினேன். அதன்பிறகே அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.
என்னை நம்புங்கள், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் உங்களுக்கும் ஒரு வழியை கண்டுபிடித்து காட்டுவார்” என்று சந்திரசூட் கூறினார்.
காங்கிரஸ் கண்டனம்!
அவரது பேச்சு தற்போது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது.
காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தலைவரும் முன்னாள் எம்.பியுமான உதித் ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். வேறு சில வழக்குகளுக்கும் அவர் பிரார்த்தனை செய்திருந்தால் அந்த வழக்குகளுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். ED, CBI மற்றும் IT ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்கும்” என விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குழந்தை பிறந்த போது தொப்புள் கொடியை வெட்டிய இர்பான்… திருந்தாத வருந்தாத நிலை!
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்!