மக்கள் நலனில் அக்கறைகொண்டு, அவர்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘மக்கள் பாதை’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில், நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றியசகாயம் ஐ.ஏ.எஸ், ‘‘கடந்த நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், நான் முதலமைச்சராக வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பேட்டி கொடுப்பதாக வலைதளத்திலே பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அச்சமாகவும் இருந்தது. இது, எனக்கு மட்டுமல்ல; நான் எடுத்துக்கொண்டிருக்கக் கூடிய முயற்சிகளுக்கும் இடராக வந்துவிடுமே என்று நான் அச்சப்பட்டேன்.
சரி, இந்த இளைஞர்கள் இரண்டு நாள் பேசுவார்கள் பிறகு, மறந்துவிடுவார்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோதே, திடீரென்று கிராமத்தில் பெண்களுக்கு சாமி வந்து ஆடுவதைப்போல, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னையில், நான் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையோடு, என்னைச் சந்திக்கவேண்டும், எனது வீட்டுக்கு வரவேண்டும் என்று, ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது மீண்டும் அச்சம் வந்தது. இவர்களை எதிரிகள் யாராவது ஏவி விட்டிருப்பார்களோ! நம்மைக் காலி செய்வதற்காகத்தான் இப்படி செய்துகொண்டிருக்கிறார்களோ என்று, நான் எண்ணிப் பார்த்தேன்.
அக்கிரமங்கள், அநியாயங்கள் எங்கெல்லாம் தென்படுகிறதோ அங்கு, அச்சமில்லாமல் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, யார் அந்த எதிரிகள்? என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையும் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், மீண்டும் மதுரையில் பெரிய மாநாடு நடத்தினார்கள். அப்போது மீண்டும் அச்சம் வந்தது. அங்கேயும் முதல்வர் கோரிக்கையை வைத்தார்கள். அதிலிருந்து அடிக்கடி வலைதளங்களில் இந்தச் செய்தி பரவியது.
கஜகஸ்தானில் மாதம் ரூபாய் 12 லட்சம் சம்பாதிக்கும் ஒரு பொறியாளர், ‘நீங்கள் அரசியலுக்கு வந்தால், நான் என்னுடைய வேலையை விட்டுவிடுகிறேன்’ என்று சொன்னபோது, எனக்கு அச்சம் அதிகமானது. ஆர்வமும், ஆற்றலும் உள்ள இளைஞர்களை மிகச் சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்தேன்.
நாங்களெல்லாம் ஒரு பித்தலாட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். இந்த பித்தலாட்ட சமூகம் எங்களோடு போகட்டும். அடுத்த சமூகம் ஒரு நேர்மையான சமூகமாக உருவாக வேண்டும். எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேர்தலுக்கு அப்பாற்பட்டு என்னுடைய இளைஞர்களை சமுகப்பணிக்கு வாருங்கள்! என்று அழைத்தேன். அதனுடைய விளைவு இன்றைக்கு மக்கள் பாதையாக மலர்ந்திருக்கிறது” என்றார்.