விடாமுயற்சி பொங்கல் ரேஸை விட்டு விலகியதும், இயக்குநர் கிருத்திகா உதயநிதி தான் இயக்கிய ”காதலிக்க நேரமில்லை” திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவித்தார். ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு நேற்று (ஜனவரி 7) சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வின் போது ஹீரோ ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர், ‘இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷலான படம். ஏனென்றால் முதல் முறை ஒரு பெண் இயக்குநர் இயக்கத்தில் நடித்துள்ளேன். இதுவே ஒரு புது அனுபவமாக இருந்தது.

எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். காட்சி அமைப்புகள், கதையின் அணுகுமுறை ஆகியவற்றில் கிருத்திகா உதயநிதியின் பார்வை வித்தியாசமாக உள்ளது. அவங்க சொல்வதை கேட்டு நடித்த போது எனக்கே என் நடிப்பில் ஒரு மாற்றம் தெரிந்தது. அவருடைய ரைட்டிங் அருமையாக இருக்கும். எழுத சொன்னால் எழுதிக்கொண்டே இருப்பார். அந்தளவுக்கு கிரியேட்டிவாக யோசித்து விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார். அவருடன் இணைந்து இந்த படத்தில் வேலை செய்தது மிக்க மகிழ்ச்சியான விஷயம். இனி பெண் இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது’ என்றார்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்