கூட்டணியில் இருந்து விலக நான் காரணமா… டிடிவி பேசுவது விளங்கவில்லை : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published On:

| By Kavi

டிடிவி தினகரன் வெளியேறியதற்கு எந்த அடிப்படையில் நான் காரணம் என்று எனக்கு தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தேஜ கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறியது. இந்தநிலையில் நேற்று (செப்டம்பர்7) மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன், நாங்கள் தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம். ஆணவம்… அகம்பாவத்துடன் நடந்துகொண்டார். அவருக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை.

ADVERTISEMENT

ஓபிஎஸுக்காக நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார். இது அகம்பாவம் தானே. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்கிறார். அவரை முதல்வர் வேட்பாளாராக ஏற்பது தற்கொலைக்கு சமம் ” என்று கூறியிருந்தார்,

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 8) நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “டிடிவி தினகரனோடு இதுவரை கருத்து வேறுபாடு இருந்தது கிடையாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் அமித்ஷா தலைமையில் நான் பாஜகவில் இணைந்தேன். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசிர்வாதத்துடன் மாநில தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

என்.டி.ஏ கூட்டணியின் மாநில தலைவராக எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா அறிவித்தார். அகில இந்திய தலைமை அறிவிக்கும் போது, அதை ஏற்க வேண்டியது எங்களது கடமை.

எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை ஏற்கவில்லை என டிடிவி தினகரன் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக வெற்றிபெற வேண்டும் என நெல்லை மாநாட்டில் அண்ணாமலை நேரடியாக அறிவித்தார்.

ADVERTISEMENT

எனவே, கூட்டணியில் இருந்து விலக நான் தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. இரண்டு மூன்று மாதத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாம். இப்போது ஏன் சொல்கிறார் என எனக்கு விளங்கவில்லை. டிடிவி தினகரன் இப்படி பேசியது எனக்கு மன வருத்தம் தான்.

செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டது அவர்கள் உள்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து சொல்ல முடியாது. கோயிலுக்கு செல்வதாக செங்கோட்டையனே கூறிவிட்டார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க அவர் செல்லவில்லை” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share