மிஷ்கினோடு பேசுவது எப்போதும் சுவராஸ்யம். உலக சினிமா, இலக்கியம் என அறை முழுக்க நிரம்பிக் கிடக்கிறது பேச்சும், புத்தகங்களும். ‘பிசாசு’ வெற்றிக்குப்பிறகு, ‘சவரக்கத்தி’ படத்தில் பிஸியாகிவிட்டார் மிஷ்கின். தான் தயாரித்து, திரைக்கதை எழுதி, தன் மேற்பார்வையில் உருவாகும் ‘சவரக்கத்தி’ பரபரப்புக்கு மத்தியிலும் மனிதர் நேரம் ஒதுக்கி வாசிக்கிறார்.
20 நாள் ஷூட்டிங்குக்குப் பிறகு கிடைத்த ஒரு சின்ன இடைவெளியில் சந்திப்பு. அறையை நோட்டம் விடுகிறேன்.
உங்களுடைய அறையில் விருதுகள், அங்கீகாரங்கள் எதுவும் இல்லையே?
இருக்காது. ஏனென்றால் நான் எந்த விருதுகளையும் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். விருதுகள் ஒரு படைப்பாளிக்கு உற்சாகம் அளிக்கும், ஊக்குவிக்கும் என்பது பொதுவான நம்பிக்கை என்றாலும் என்னைப் பொருத்தவரை, விருதுகளை நான் பளுவாகக் கருதுகிறேன். உண்மையான எனக்கான விருது – நான் இறந்து பல வருடங்கள் கழித்து, அடுத்த தலைமுறையினரால் என் படங்கள் பார்க்கப்பட்டு “இது தரமான படைப்பு” என கொண்டாடப்பட்டால் அதுவே உன்னதமான விஷயம் என நினைக்கிறேன். விருதுக்காக விழாக்களுக்குப் போய் விழாக்களில் விருது கிடைக்குமா? கிடைக்காதா? என நகம் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது ரொம்ப குழந்தைத்தனமாகப்படுகிறது. என் படங்களை எப்போதுமே எந்த விருதுகளுக்கும் அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறேன். இது, என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை, மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இப்படியிருக்க எனக்குச் சுதந்திரம் இருக்கிறது.
‘சவரக்கத்தி’ படத்தை தயாரிக்கிறீர்கள், நடிக்கிறீர்கள், இயக்கவில்லை. உண்மையில், இதில் உங்களுடைய பங்களிப்பு என்ன?
தமிழ் சினிமா என்னை ஒரு டார்க் பிலிம் மேக்கராக மட்டுமே பார்க்கிறது. ரொம்ப சீரியஸான ஆள் என்ற பிம்பம் என்மீது படிந்திருக்கிறது. உண்மையில், என்னைவிட ஜாலியான ஆளைப் பார்க்க முடியாது. அவ்வளவு சோகங்கள் இருந்தும் ஜாலியாக இருக்கிறேன். இந்தக் கதை உருவானதே ஒரு சுவராஸ்யமான விஷயம். ரொம்ப நாளாக எனக்கொரு பார்பரைத் தெரியும். சும்மா பொய்யை அடிச்சுவிடுவார். உருப்படி இல்லாத விஷயங்களுக்கெல்லாம் பொய் பேசுவார். ஒரு 15 நிமிடம் அவரிடம் தலையைக் கொடுப்பதற்காக, அவர் சொல்கிற கதையை எல்லாம் கேட்க வேண்டியிருந்தது. அவர் கையில் இருந்த சவரக்கத்தியைப் பிடுங்கிவிட்டு களத்தில் இறக்கிவிட்டால் எப்படி இருக்கும்? என யோசித்தபோது உருவான கதைதான் ‘சவரக்கத்தி’. ஒரு ஜாலியான கதை எழுதலாம் என்றுதான் ‘சவரக்கத்தி’ கதையை எழுதினேன். இந்தப் படத்தை நானே கதை, திரைக்கதை, எழுதி, தயாரிக்கவும் செய்கிறேன், என் உதவியாளரும் என் தம்பியுமான ஆதித்யா இயக்குகிறார். இந்தக் கதையை எழுதி முடித்து இயக்குநரிடம் கொடுத்தபோது அவர், என்னை நடிக்கச் சொன்னார். நான் இன்னும் கொஞ்சம் எளிமையாக ஒரு முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தபோது இயக்குநர்கள் வெற்றிமாறனும், ராமும் நினைவுக்கு வந்தார்கள். ஆனால், வெற்றிமாறன் பிஸியாக இருப்பதால், ராமைக் கேட்டேன். அவன் திரைக்கதையைப் படித்துவிட்டு நடிக்கிறேன் என்றான். என் சக தோழனான அந்தச் சவரக்காரரிடம், ஒரு பிரச்சினையைக் கொடுத்து அதை, பொய்மூலம் சமாளி என்கிறேன். அதை, அவர் சமாளிக்கிறாரா என்பதுதான் கதை. பொய்யை பொருந்தும்படிக்கூடச் சொல்லத்தெரியாத ஒரு மனிதர் அவர். அப்படி ஒரு சவரக்காரராக ராமும், எதுவுமே பேசாத ஒரு வன்மமான ரவுடியாக நானும் நடிக்கிறேன்.
சவரக்கத்தி, ரொம்ப ஜாலியான படம் என்றால் இதில், ராம் எப்படிப் பொருந்திப் வருவார்?
விகடமாக நடிப்பது ரொம்ப சேலஞ்சான விஷயம். சிறு வயதில் இருந்தே அப்படி ஒரு உடல்மொழிக்குப் பழக்கப்பட்டிருந்தால் இம்மாதிரி படங்கள் செய்வது மிக இயல்பாக வரும். அந்தவகையில், ராமின் எல்லாச் சேட்டைகளையும் நான் ரசிக்கிறேன். என் தம்பியோடு கூட இருக்கும் உணர்வு எனக்கு வருகிறது. ராம் பங்களா, கார் வாங்கவேண்டும் என்று ஆசைப்படவில்லை. நல்ல சினிமா எடுக்கவேண்டும் என நினைக்கிறான். அந்த உணர்வு மட்டுமல்லாமல் இந்தக் கதையையும் உணர்ந்து கதாபாத்திரமாகவே ராம் மாறியிருக்கிறான்.
திரைக்கதை பற்றிய வகுப்புகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். திரைக்கதை எழுத கல்விமுறை அவசியமா?
திரைக்கதை என்பது ஒரு கட்டுமானம். வீடு கட்டுவதற்கு எப்படி ‘புளூ பிரிண்ட்’ அவசியமோ அப்படியே திரைக்கதைக்கும் கடுமையான படிப்பு அவசியம். ஒரு கதையில், கதாபாத்திரங்களின் தர்ம நியாயங்கள் மட்டுமல்ல; கதை எங்கே துவங்கி எந்த இடத்தில் முடிகிறது? முதன்மையான கதாபாத்திரம் யார்? அந்தப் பாத்திரத்தின் தேவை, இலக்கு என்ன? என்பதையெல்லாம் ஒரு திரைக்கதை ஆராய வேண்டும். திரைக்கதைகள் தொடர்பாக 250 புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு நல்ல திரைக்கதையின் சூட்சுமம் இன்னும் எனக்குப் புலப்படவில்லை. ஒரு நல்ல திரைக்கதை எழுதுவதை நோக்கிய கற்கையில்தான் நான் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். ‘அன்னா கரீனினா’ கதையை எழுத லியோ டால்ஸ்டாய்க்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. ‘கரம்சோவ் சகோதரர்கள்’ கதையை எழுத ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கிக்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. டால்ஸ்டாய் இறந்து 100 ஆண்டுகள் ஆகிறது. உலகின் தலைசிறந்த திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் யாரைக் கேட்டாலும் லியோ டால்ஸ்டாயை தங்களின் ஆகச்சிறந்த படைப்பாளி என்கிறார்கள். காலம் கடந்தும் தஸ்தயேவ்ஸ்கி வாழ்கிறார். ஆக, கதை என்பது சின்ன விஷயமல்ல; மிகப்பெரிய விஷயம். அதன் அடிப்படையில் உருவாகும் திரைக்கதைக்கு ஆழமான கல்வி மட்டுமல்ல; இடைவிடாத வாசிப்பனுபவமும் தேவை.
தமிழ் சினிமாவின் முகம் வெகுவாக மாற்றம் பெற்றிருக்கிறது. தொழில்நுட்பம், நடிப்பு, என பலவிதமான மாற்றங்கள் நடந்திருக்கும்நிலையில் சினிமா விமர்சனமுறை வளர்ச்சி அடைந்திருக்கிறதா?
ஒரு சினிமாவை ரசிப்பது போன்றதல்ல, விமர்சன முறை. யாருமே பார்க்காத ஒரு கோணமும் பார்வையும் விமர்சனத்தில் இருக்க வேண்டும். உலகளவில் சில இலக்கிய, சினிமா விமர்சகர்களின் பார்வைகள் படைப்புகளையே விஞ்சி நிற்கின்றன. உன்னதமான படைப்புகளையே தாண்டிவிடும் அளவுக்கு விமர்சனம் என்பது தரமானதாகவும், செறிவானதாகவும் இருக்க வேண்டும். தமிழில், இப்படி ஒரு ஆழமான விமர்சன மரபு வேண்டுமென விரும்புகிறேன். விமர்சகர்களுக்கு சினிமாபற்றிய அறிவு இருக்கவேண்டும். உலக இலக்கியப்போக்கு, சினிமாவில் நடக்கும் மாற்றங்கள், ஏற்கனவே படைக்கப்பட்ட உன்னதமான படைப்புகளோடு, விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்ட படைப்பை ஒப்பிடும் அறிவும் இருக்கவேண்டுமே தவிர, தேநீர்க் கடைகளில் நடக்கும் வெட்டிப்பேச்சைப் போன்றதல்ல விமர்சனம். ஒரு விமர்சகன் அமர்ந்திருக்கும் இருக்கைக்குக் கீழே நான் அமர்ந்திருக்க விரும்புகிறேன். அதுவொரு விமர்சகனுக்கு நான் வழங்கும் உன்னதமான இடம். அந்த இடத்தில் அவர், அமரும்வண்ணம் ரசனையிலும், அறிவிலும் உயர்ந்தவராக இருக்கவேண்டும்.
அடுத்து நீங்கள் என்ன படம் இயக்கப் போறீங்க?
ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர். நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் இந்த நபர்களைப் பார்க்கலாம். நம் எல்லோருக்குள்ளும் அப்படி ஒரு ஆள் இருக்கிறான். மரணம் அவனைப் பாதிப்பதே இல்லை. அந்த மரணம் பற்றிய கவலையோ, வருத்தமோ அவனுக்கு இல்லை. எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்துகொண்டிருக்கிறது. அந்த மிருகத்தோடு நான் நடத்தப்போகிற போராட்டம்தான் என்னுடைய அடுத்த படம்.
இந்தக் கேள்வி கேட்கக் கூடாது… உங்கள் மரணத்தின் பின்னர் நீங்கள் என்னவாக நினைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?
ஒரு நல்ல கலைஞன், தான் வாழ்கிற காலத்திலேயே தன்னைச் சாகடித்து, ஒரு படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தும்கூட ‘செவன் சாமுராய்’ நம் ஆன்மாவுக்கு நெருக்கமாய் இருக்கும். அப்படி ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு பயணத்தில் ‘நான்’ என்ற அகம்பாவத்தை அழித்துக் கொல்கிறேன். அதைநோக்கி பயணப்படுகிறேன். நான் பார்த்த பலர், கடும் சோகத்தில் மரணிக்கிறார்கள். கசப்புத்தன்மையோடும், வெறுப்போடும், விரக்தியிலும் இறக்கிறார்கள். நான், மிக அழகாக இறப்பதற்கு என்னைத் தயார்செய்து வருகிறேன். நிச்சயம், மிக மென்மையாக, எளிமையாக, அழகாக இறப்பேன். என் படைப்புகளின் மூலம் வாழ்வேன்.
டி- அருள்எழிலன்