மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஜூன் 5-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
அப்போது அவர், ‘தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘சற்று ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகவே சொல்கிறேன் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும், 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும்’ என்றெல்லாம் தெரிவித்தார். அதிமுகவையும் மிக கடுமையாக சாடினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வளவு நம்பிக்கையாக கருத்துக்களை அண்ணாமலை வெளியிட்ட போதும்… நேற்று ஜூன் 5 காலை மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனிடம், ‘தேர்தல் முடிவுகளுக்காக என்னோட மாநில தலைவர் பதவியை நான் ராஜினாமா பண்றதா முடிவு செஞ்சிருக்கேன்’ என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.
இதைக் கேட்ட கேசவ விநாயகன், ‘அப்படி ஒரு முடிவு எடுக்காதீங்க’ என்று அண்ணாமலையை சமாதானப்படுத்தி உள்ளார்.
அண்ணாமலையோ, ‘என்னுடைய சுபாவத்துக்கு இந்த பதவியை ஏற்று நடத்த முடியவில்லை. உத்திர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில மேலிட பொறுப்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய மகராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு தலைமைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதைப் பின்பற்றி நானும் தமிழக தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முடிவு எடுத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதை கேசவவிநாயகன் ஏற்கவில்லை. இந்த தகவல் அறிந்து மேலும் சில பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையை தொடர்பு கொண்டு, ‘பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து முக்கியமான ஒரு விஷயத்தை செய்திருக்கோம். இந்த நிலையில் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டாம். தேர்தல் தோல்வி என்பது அரசியலில் சகஜம்’ என்று அண்ணாமலையிடம் பேசியிருக்கிறார்கள்.
நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் இது தொடர்பாக அண்ணாமலையிடம் பேசி வருவதாக பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி தேசிய தலைமைக்கு புகார்களை அனுப்பும் பணி ஜூன் 4 மாலையில் இருந்தே தொடங்கப்பட்டு விட்டது.
“தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருப்பார்கள். அது டெல்லியில் இப்போதைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 20 எம்பிக்கள் வரை கிடைக்க இருந்ததை தடுத்தது அண்ணாமலையின் செயல்பாடுகள் தான்.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதாக சில விஷயங்களை செய்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் பாஜக கூட்டணிக்கும் கிடைக்கவேண்டிய எம்பிக்கள் எண்ணிக்கையை காவு கொடுத்து விட்டார்.
அதிமுக தலைவர்களோடு அண்ணாமலை மோதல் போக்கை பின்பற்றாமல் இருந்திருந்தால்… அதிமுக கூட்டணியை விட்டு போயிருக்காது.
எனவே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்பட்ட இழப்புக்கு அண்ணாமலை தான் பொறுப்பு” என்று அவர் மீது புகார்கள் தெரிவித்து தேசிய தலைமைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதை அறிந்து தான் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “என்னை இங்கே அனுப்பியது கட்சியை வளர்க்கத் தான். இந்த மைதானத்தில் இப்படி ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துதான் என்னை இங்கே அனுப்பினார்கள். மற்றவர்களோடு அட்ஜஸ்ட் செய்து கொண்டு வளர வேண்டும் என்றால் அதற்கு வேறு ஆளை பார்த்துக் கொள்வார்கள்” என்று சற்று பூடகமாகவே பேசி இருக்கிறார் அண்ணாமலை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– வேந்தன்
பியூட்டி டிப்ஸ்: உடல்பருமனைப் பற்றி கவலைப்படாதவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் வரை!
Comments are closed.