நான் தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர்: வங்கிக்குப் பன்னீர் கடிதம்!

Published On:

| By Guru Krishna Hari

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் போட்டி போட்டு அதிமுக கட்சி கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட, பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவி ஓபிஎஸிடம் இருந்தது. பொருளாளர் என்பவர் கட்சியின் வரவு செலவைக் கவனித்து அதற்கான அறிக்கையைப் பொதுக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஓபிஎஸ் இல்லாமல் நேற்று நடந்த பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதில், தற்போதைய நிலவரப்படி நிலையான வைப்புத் தொகை கணக்கில் 244. 80 கோடி ரூபாய் இருப்பதாகவும், நடப்பு கணக்கில் 2.77 கோடி ரூபாய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி 9 முதல் 2022 ஜூன் 6 வரை அதிமுகவுக்கு பல்வேறு வகைகளில் கிடைத்த வரவானது 53.40 கோடி ரூபாய், மொத்த செலவுகள் 62 கோடி ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய பொருளாளர் நியமனம் தொடர்பாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக வங்கிக் கணக்குகளை முறையாகக் கையாள இனி திண்டுக்கல் சீனிவாசனுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உடனடியாக ஓ.பன்னீர் செல்வமும் கரூர் வைஸ்யா வங்கி மயிலாப்பூர் கிளைக்கு ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதாவால் நான் கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்டுப் பல ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். 2017 முதல் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். இந்த வங்கியில் உள்ள அதிமுகவின் மூன்று கணக்குகளை நான் தான் கையாண்டு வருகிறேன்.

நேற்று சட்டவிரோதமாகப் பொதுக்குழுவைக் கூட்டி எனக்குப் பதிலாக திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளர் என்று நியமித்துள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படி இன்று வரை நான் தான் பொருளாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் உள்ளது. எனவே திண்டுக்கல் சீனிவாசனோ அவருக்கு பதிலாக வேறு யாரையாவதோ அதிமுகவின் வங்கிக் கணக்குகளைக் கையாள அனுமதிக்கக் கூடாது. என்னைத் தவிர அதிமுகவின் வங்கிக் கணக்குகளை வேறு யாரையாவது கையாள அனுமதித்து, அதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதற்கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share