வருமானவரி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வருமான வரித்துறை சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் அதிக வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்த்திற்கு விருது வழங்கப்பட்டது. சென்னையில் நேற்று நடந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் நிகழ்வில் பங்கேற்க முடியாததால் அவரது சார்பாக அவரது மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு தமிழிசை செளந்தரராஜன் கையால் விருது வாங்கினார்.
இந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘அதிக வருமான வரி செலுத்தியவரின் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழகத்தின் வருமான வரித்துறையினருக்கு என்னுடைய நன்றிகள் மற்றும் வருமான வரி தினத்தில் அப்பாவை கெளவரவப்படுத்தியதற்கு புதுச்சேரிக்கு என் அப்பாவின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசும் போது, ‘ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, சூப்பர் பேயர். இதன் மூலம் மக்களுக்குச் சிறந்த ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்’ என்று பாராட்டிப் பேசினார்.
ஆதிரா









