அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் தமிழக அரசின் புதிய ஆணைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு மீன்வளத்துறையில் மீன்வள ஆய்வாளர் பணிக்கான கல்வித் தகுதியைத் தளர்த்தித் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகவும், அரசு மீன்வள பல்கலைக்கழக மாணவர்களின் வேலை உரிமையை பறிக்கும் வகையிலும் செய்யப்பட்டுள்ள இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது.
மீன்வளத் துறையில் உள்ள மீன்வள ஆய்வாளர் பணியிடங்களில் 60% இடங்கள் நேரடியாகப் போட்டித் தேர்வு மூலமாகவும், மீதமுள்ள 40% இடங்கள் பதவி உயர்வின் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மீன்வள ஆய்வாளர் பணிக்கு இதுவரை இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது மீன்வள அறிவியல் படிப்பு மட்டுமின்றி, விலங்கியல், கடல்சார் உயிரியல், கடலோர மீன்வளர்ப்பியல், சிறப்பு விலங்கியல், கடல்சார் பொறியியல், கடலியல் ஆகிய துறைகளில் பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் இப்பணிக்கு தகுதிபெற்றவர்கள் என்று ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட அரசிதழில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கோபால் பெயரில் வெளியாகியுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, உள்நோக்கம் கொண்ட செயலாகும்” என கூறியுள்ள ராமதாஸ், மீன்வள ஆய்வாளர் பணி குறித்தான நுணுக்கங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் “ நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், பொன்னேரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள மீன்வள கல்லூரிகள் ஆகியவற்றில் மட்டும் மீன்வள அறிவியல் படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. வேறு அரசுக் கல்லூரிகளிலோ அல்லது தனியார் கல்லூரிகளிலோ இந்தப் படிப்பு கற்பிக்கப்படவில்லை. தமிழக அரசில் மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகிய பணிகள், தனியார் நிறுவனங்களில் உள்ள மீன்வளம் சார்ந்த பணிகள் ஆகியவற்றை மட்டுமே இலக்காகக் கொண்டு இப்படிப்பை நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பிற அறிவியல் படிப்புகளை படித்தவர்களையும் இப்பணியில் சேர அனுமதித்தால், இதற்காகவே உருவாக்கப்பட்ட மீன்வள அறிவியல் படித்தவர்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விடும். அவர்களால் வேறு பணிக்கு செல்ல முடியாது என்னும் சூழலில் இருக்கும் வேலைவாய்ப்பையும் பறிப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்” என கூறியுள்ளவர் மீன்வள ஆய்வாளர் பணிக்கு துறை சார்ந்து படித்த மாணவர்களையே பணியில் அமர்த்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“மீன்வள ஆய்வாளர் பணிக்கு 72 பேரையும், உதவி ஆய்வாளர் பணிக்கு 12 பேரையும் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது என்பதைத் தவிர வேறல்ல.
மீன்வள ஆய்வாளர் பணிக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படிப்புகளில் பெரும்பாலானவை தனியார் கல்லூரிகளில் மட்டும் கற்பிக்கப்படுபவையாகும். அத்தகைய தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகவே இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. முந்தைய திமுக ஆட்சியில் 2007-ஆம் ஆண்டிலும், 2011-ஆண்டிலும் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது” என கூறியுள்ளார். மேலும், வனச்சரகர் பணிக்குத் தமிழக அரசு, வனத் துறை சாராத மாணவர்களை பணிக்கு அமர்த்த முற்பட்டபோது பாமகவின் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் திரும்ப பெறப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வனச்சரகர், வனவர் பணிக்கு வனவியல் படித்த மாணவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டும் பிற அறிவியல் பட்டதாரிகளை தேர்வு செய்யலாம் என விதிகள் மாற்றப் பட்டன. அதேபோல், இப்போதும் தமிழக அரசு அதன் அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று மீன்வள ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியல் பட்டம் மட்டுமே தகுதி என்று அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
