தமிழ்ப் படங்களின் ஓப்பனிங் பாடல்களைக் கலாய்த்து எடுக்கப்பட்டிருக்கும் ‘தமிழ்ப்படம் 2’ படத்தின் ஒரு பாடல் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.
நடிகர் சிவா – இயக்குநர் சி.எஸ்.அமுதன் காம்போவில் 2010இல் வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. பகடி வகை படமான இதில் தமிழ் சினிமாவை வகை தொகை இல்லாமல் கலாய்த்து வைத்திருந்தனர். இந்த நிலையில் இதன் அடுத்த பாகமாக தமிழ்ப்படம் 2 விரைவில் வெளிவரவிருக்கிறது.
இப்பட ஃபர்ஸ்ட் லுக், டீசர் என எல்லாமே படு கலாயாக இருந்தன. போதாத குறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கி, பிக் பாஸ் கமல் வரைக்கும் சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் சம்பவங்களுக்குப் பொருத்தமாக போஸ்டர்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளிவந்தது படக்குழு.
அந்த வரிசையில், தற்போது ‘நான் யாருமில்ல…’ எனத் தொடங்கும் ஒரு [பாடலை](https://www.youtube.com/watch?time_continue=5&v=4FY2-BivRR4) நேற்று (ஜூன் 26) வெளியிட்டுள்ளது படக்குழு.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் தங்களது ஓப்பனிங் சாங்கில் தங்களைப் பற்றி பில்ட் அப் செய்வது வழக்கம். இந்த வழக்கத்தை அப்படியே தலைகீழாகக் கலாய்த்துள்ளது இந்தப் பாடல். ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன் என அத்தனை பேரையும் சீண்டும்படி உள்ள இந்தப் பாடலில் சிவா தோன்றி நடித்துள்ளார்.
ஏற்கெனவே வந்த முதல் பாகத்தின் ஓப்பனிங் சாங் கிட்டத்தட்ட இதே பாணியில் ஹீரோ ஓப்பனிங்கைக் கலாய்த்துதான் வந்திருந்தது. ‘குத்து விளக்கு’ எனும் மற்றொரு பாடல் இதுவரையிலான தமிழ் சினிமா அயிட்டம் சாங்குகளை ஒட்டுமொத்தமாகக் கிண்டல் செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. டூயட் பாடலான ‘ஓ மஹ சீயா…’ எனும் பாடல் தமிழ் சினிமாவில் வந்த பாப்புலர் பாடல்களின் அர்த்தமற்ற வரிகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. அடுத்து ‘சூறாவளி கிளம்பியதே’ எனும் பாடலை, ஒரே பாட்டில் பணக்காரராகும் சினிமா ஹீரோக்களைக் கலாய்த்து அமைத்திருந்தனர்.
ஆகவே, தமிழ்ப்படம் 2வில் அடுத்து வெளியாகும் மற்ற பாடல்களும் சினிமாவைக் கலாய்த்தே இருக்கும் எனத் தெரிகிறது.
