2008ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதற்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
பயிற்சி மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என்ற பெயரில் குறைந்த ஊதியத்துக்குத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதைத் தடுக்க, 2008ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் உரிய விதிகளை உருவாக்கி அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பில், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் மத்திய அரசு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதால், அதன்பின், தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் நேற்று (அக்டோபர் 2) விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், அதற்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
